

யஷஸ்வி ஜெய்ஸ்வால்
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் கடைசி நாளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் யஷ் ரதோட் அதிரடி சதங்களுடன் அசத்தி, இந்தியா ஏ அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
ஜெய்ஸ்வால் 162 பந்துகளில் 15 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் யஷ் ராத்தோட் 122 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் இருந்தனர். இந்தியா ஏ 52.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் என்று இருந்த போது இரு அணி கேப்டன்களும் இதற்கு மேல் இந்த ஆட்டம் வெற்றி தோல்வி முடிவுக்கு செல்ல முடியாது என்பதால் கைகுலுக்கி டிராவுடன் முடித்து வைத்தனர்.
மழை காரணமாக ஈரப்பதமாக இருந்த மைதானத்தால் கடைசி நாள் ஆட்டம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகத் தொடங்கியது. இதனால் இரு அணிகளும் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளைக்குச் சென்றன.
ஆட்டம் தொடங்கியதும் நியூஸிலாந்து ஏ பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை இந்தியா ஏ இன்னும் எட்டாத நிலையில், சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சுதர்சன் லெக்-கல்லி திசையில் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்த ஓவரிலேயே பிரெட் ராண்டெல் வீசிய அபாரமான பந்தில் படிக்கல் கிளீன் போல்டானார்.
புதிய பந்து ஸ்விங் ஆன நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் யஷ் ரதோடும் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினர். பந்து பழையதாக மாறியதும் இருவரும் தங்கள் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தனர். நியூஸிலாந்து ஏ அணிக்கு மேலும் சிக்கலாக, ஃப்ரேசர் ஷீட் மற்றும் ஜேடன் லெனாக்ஸ் ஆகிய இரு பந்து வீச்சாளர்களும் காயம் காரணமாக பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் கேப்டன் ரைஸ் மரியு, டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் மற்றும் மேட் பாய்ல் ஆகியோரின் பகுதி நேர சுழற்பந்துவீச்சை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை சாதகமாக்கிக் கொண்ட ஜெய்ஸ்வாலும் ரதோடும் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினர். நியூஸிலாந்து ஏ அணி வீசிய ஷார்ட்-பால் உத்தியையும் இருவரும் திறம்பட எதிர்கொண்டு ரன் வேகத்தை மேலும் உயர்த்தினர்.
ஜெய்ஸ்வால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையின் 18-வது சதத்தைப் பதிவு செய்தார். இது சமீபத்திய போட்டிகளில் பெரிய ஸ்கோர் எடுக்கத் தவறியிருந்த அவருக்கு முக்கியமான சதமாக அமைந்தது. தேநீர் இடைவேளைக்கு முன்பாகவே அவர் 150 ரன்களைக் கடந்தார்.
இடைவேளைக்குப் பிறகு யஷ் ரதோடும் சதத்தை எட்டினார். தொடர்ந்து இருவரும் அதிரடியாக விளையாடி, வெறும் 245 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 247 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் இந்தியா ஏ அணி 2 விக்கெட் இழப்புக்கு 282 ரன்களை எட்டியது.
மீதமிருந்த சுமார் இரண்டு மணி நேர ஆட்டத்தில் வெற்றிக்காக முயற்சிப்பதைவிட, இந்திய அணி தனது பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்தது. இதையடுத்து இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கி போட்டியை டிராவில் முடித்துக் கொண்டனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - யஷ் ரதோட் ஜோடியின் அதிரடி ஆட்டமே போட்டியின் கடைசி நாளில் முக்கிய பேசுபொருளாக அமைந்தது. மூன்று வடிவ வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அண்ட் கோ ஒரு வடிவ வீரராக மாற்றியதால் மேட்ச் பிராக்டீஸ் இல்லாமல் போய் சில சாதாரண ஸ்கோர்களில் அவர் முதல் தர கிரிக்கெட்டில் ஆட்டமிழந்து கொண்டிருந்தார். இப்போது இந்த சதம் அவருக்கு பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.