

ரோம்: ஐரோப்பாவின் சுமார் ஒன்பது நாடுகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள ஃபிரிட்ஜ்களை குறிவைத்து சைபர் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உணவு விநியோக சங்கிலியை பாதிக்கச் செய்யும் நோக்கில் இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வியை இந்தத் தொடர் சம்பவம் எழுப்பி உள்ளது.
ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம், பின்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்வீடன், எஸ்தோனியா உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் அங்காடிகளின் ஃபிரிட்ஜ்கள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட இயந்திரங்களான ஃபிரீஸர், குளிரூட்டப்பட்ட ஷெல்ஃப் போன்றவை இதில் குறிவைக்கப்பட்டன.
கடந்த மாதம் (மூன்று வாரங்களுக்கு முன்னர்) ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ் நாட்டின் சூப்பர் மார்க்கெட் அங்காடிகளின் ஃபிரிட்ஜ்கள் மீது இதே வகை தாக்குதல் நடைபெற்றது. இந்நிலையில், இந்த போக்கு தற்போது ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்த இரண்டு சம்பவத்துக்கும் இதுவரை எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை. அதனால் இந்த தாக்குதலின் பின்னணி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்ஸ் போலவே ஐரோப்பாவில் தற்போது பாதிக்கப்பட்ட 9 நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களின் வெப்பநிலையை உயர்த்தி, அதில் இருந்த உணவுப் பண்டங்களை பயன்படுத்த முடியாத வகையில் பாழ் ஆகியுள்ளது. இதனால் அந்த உணவு பண்டங்களை வணிகர்கள் இப்போது அப்புறப்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இத்தாலி நாட்டில் அதிகாலை 4 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக ‘Coop’ பிராண்டு மூலம் சூப்பர் மார்க்கெட் அங்காடிகளை நடத்தி வரும் ராடென்சா குழுமம் தெரிவித்துள்ளது. குளிரூட்டப்பட்ட உணவு பிரிவின் ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு இதில் டார்கெட் செய்யப்பட்டதாக அந்த குழுமம் தெரிவித்துள்ளது.
தற்போது தாக்குதலுக்கு ஆளான நாடுகளில் பெல்ஜியம் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அங்காடிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் ஒரே நிறுவனத்தின் 15-க்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட் அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த வரை அயர்லாந்தில் 13, போர்ச்சுகலில் 7, ஸ்வீடனில் 6 சூப்பர் மார்க்கெட் அங்காடிகள் தாக்குதலுக்கு ஆளானதாக பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் குறித்த தகவலை இன்னும் வெளியிடாத நிறுவனங்கள் அல்லது அங்காடிகள் குறித்த விவரம் தெரிய வந்த பின்னர் பாதிப்பின் மொத்த விவரமும் தெரியவரும்.
இது குறித்து அந்தந்த நாடுகளின் சைபர் பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. சைபர் தாக்குதலுக்கு உள்ளான குளிர்சாதன இயந்திரங்களின் ரிமோட் கண்ட்ரோல் மென்பொருளை டென்மார்க்கைச் சேர்ந்த நிறுவனமான Danfoss வடிவமைத்து வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு உள்ளான குளிர்சாதன இயந்திரங்கள் பழைய மாடலை சேர்ந்தவை என்பதும் தெரியவந்துள்ளது. இதேதான் பிரான்ஸிலும் நடந்தது.
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, அரசு நலத்திட்டங்கள் வேண்டி மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன சொல்கிறது ஐரோப்பிய யூனியன்?
ஐரோப்பாவின் உணவு விநியோகச் சங்கிலியைச் சீர்குலைப்பதற்கும், அதன் மீதான நுகர்வோரின் நம்பிக்கையைக் குறைப்பதற்கும் செய்யப்படும் ஒரு திட்டமிட்ட முயற்சியாக இதை பார்க்கிறோம். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய யூனியனின் உணவு மற்றும் வேளாண் துறை ஆணையர் கிறிஸ்தோப் ஹன்சன் தெரிவித்துள்ளார்.