

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று வதோதராவில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி அட்டகாசமான முறையில் எதிர்த்தாக்குதல் முறையில் அடித்து ஆடி 93 ரன்களை எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்துச் சென்றதால் இந்திய அணி 300 ரன்கள் இலக்கை சற்றே சிரமப்பட்டாலும் ஒருவிதத்தில் ஆதிக்கமாகவே வென்றது என்று கூறலாம்.
குறிப்பாக ரோஹித் சர்மா பவர் ப்ளேயில் 26 ரன்களுக்கு வெளியேறியதைத் தொடர்ந்து நேற்று ரோ-கோ அதிரடிக் காட்சிகளைக் காண வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்தாலும் கோலி இறங்கி முதல் 27 ரன்களில் 6 பவுண்டரிகளை துரிய கதியில் விளாசி ரோஹித்தின் இழப்பை மறக்கடித்தார்.
ஷுப்மன் கில்லுடன் கோலி இணைந்து எடுத்த 118 ரன்களே நல்ல அடித்தளத்திற்கும் பிற்பாடு வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. கைலி ஜேமிசனின் 2வது ஸ்பெல்லில் அவர் ஹாட்ரிக் வாய்ப்புக் கூட பெற்றார். நியூஸிலாந்து கம்பேக் கொடுத்தனர். ஆனாலும் வெற்றிக் கோட்டைக் கடக்க முடியவில்லை. ஹர்ஷித் ராணாவின் அதிரடி சிறு இன்னிங்ஸும் பெரிய பங்களிப்புச் செய்தது.
நேற்று ஆட்ட நாயகன் விருதை வென்ற விராட் கோலி தன் பேட்டிங் பிலாசபியைப் பற்றிக் கூறிய போது, “நான் நம்பர் 3-ல் இறங்குகிறேன் அப்போது சூழ்நிலை கொஞ்சம் ரிஸ்க்கியாக இருந்தால் நான் எதிர்த்தாக்குதல் பேட்டிங்கையே மேற்கொள்ள முடிவெடுப்பேன். சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆடுவதை விட எதிர்த்தாக்குதல் ஆடுவதுதான் சிறந்தது. ஏனெனில் சூழ்நிலைக்காக ஆடும்போது ஒரு பந்து நம் பெயரைத் தாங்கியே வந்தால் நாம் அவுட் ஆகி விடுவோம்.
ஆகவே நீண்ட காத்திருப்புத் தேவையில்லை என்றே முடிவெடுத்தேன். அதற்காக தாறுமாறான ஷாட்களை ஆடுவதல்ல விஷயம். நாம் நம் பலங்களை நம்பி ஆட வேண்டும். அதே வேளையில் எதிரணியினரை பின்னடையச் செய்ய வேண்டும். ரோஹித்தின் விக்கெட் விழுந்த பிறகே முதல் 20 பந்துகளில் நாம் ரன் ரேட்டை உயர்த்தி எதிர்த்தாக்குதல் ஆட்டம் ஆடினால் பிறகு அதுவே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பிற்கான ஆரம்பமாக அமையும் என்று கருதினேன். இதுதான் நேற்று வித்தியாசத்தை ஏற்படுத்தியது.” என்றார்.
நேற்று அவருக்குக் கிடைத்தது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 45வது ஆட்ட நாயகன் விருது. சச்சின் டெண்டுல்கர் 62 ஆட்ட நாயகன் விருதுகளையும் ஜெயசூரியா 48 ஆட்ட நாயகன் விருதுகளையும் பெற்று முன்னணியில் உள்ளனர் .
இந்திய- நியூஸிலாந்து அணிகள் மீண்டும் ஜனவரி 14ம் தேதியன்று ராஜ்கோட்டில் 2வது போட்டியில் மோதுகின்றன.