

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 3 ஆயிரம் ரன்கள் குவித்து இஷான் கிஷன் சாதனை புரிந்தார்.
2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் நேற்று தொடங்கியது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியும், 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசரிஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் 11, அபிஷேக் சர்மா 7, நித்திஷ்குமார் ரெட்டி 1, ஹெயின்ரிச் கிளாசன் 31, சலில் அரோரா 9, ஹர்ஷ் துபே 3, அனிக்கெட் வர்மா 43 ரன்கள் எடுத்தனர். டேவிட் பெய்ன் 6 ரன்களும், ஜெய்தேவ் உனத்கட் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் கேப்டன் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தின்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம் குறைந்த பந்துகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்தார் கிஷன். அவர் 2,180 பந்துகளில் 3 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ரிஷப் பந்த்தும் (2,028 பந்துகள்), 2-வது இடத்தில் யூசுப் பதானும் (2,082 பந்துகள்), 3-வது இடத்தில் சூர்யகுமார் யாதவும் (2,130 பந்துகள்), 4-வது இடத்தில் சுரேஷ் ரெய்னாவும் (2,135 பந்துகள்), 5-வது இடத்தில் எம்.எஸ்.தோனியும் (2,152 பந்துகள்) உள்ளனர். இதைத் தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடத் தொடங்கியது.