பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது இருண்ட காலமா? - விமர்சனங்களுக்கு ஷதாப் கான் பதிலடி

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது இருண்ட காலமா? - விமர்சனங்களுக்கு ஷதாப் கான் பதிலடி
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிராக எந்த வித சவால்களும் இன்றி சரணடைந்ததையடுத்து தற்போதைய பாகிஸ்தான் அணி மீது முன்னாள் வீரர்கள் ஷாஹித் அஃப்ரீடி மற்றும் முகமது யூசுப் ஆகியோர் கடும் விமர்சனங்களை வைத்ததோடு பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இருண்ட காலம் இது என்று கடுமையாகச் சாடியுள்ளனர். இதற்கு ஷதாப் கான் பதிலடி கொடுத்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷாகித் அஃப்ரீடி, “முடிவுகளை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இருந்தால் நான் உடனடியாக பாபர் அசாம், ஷாஹின் அஃப்ரீடி, ஷதாப் கான் ஆகியோரை நீக்கி விடுவேன். இவர்கள் அனைவரும் மூத்த வீரர்கள் நன்றாக ஆட வேண்டும் என்ற பொறுப்பு இவர்களுக்கு இல்லை. போட்டிகளை தோற்றுக் கொண்டே இருக்கிறீர்கள்.

தோற்பது பிரச்சனையில்லை என்றாலும் எப்படி தோற்கிறோம் என்பது பெரிய பிரச்னையாக உள்ளது. ஒருதலைபட்சமாக சரண்டைவதா? இது பாகிஸ்தான் டீம் நீங்கள் போராடித்தான் ஆக வேண்டும். நாங்களும் கிரிக்கெட் ஆடியிருக்கிறோம், நாங்களும் தோற்றிருக்கிறோம். ஆனால் இப்படி சரணடைந்தது இல்லை. நாங்கள் தோற்றோம் ஆனால் போராடினோம். ” என்று சாடினார்.

முகமது யூசுப் கூறும்போது, “ஷாஹின், பாபர், ஷதாப் கான் ஆகியோரை அணியிலிருந்து தூக்க வேண்டியதுதான். அணிக்கு புதிய வீரர்கள் தேவை. பலவீனமான அணிகளுக்கு இடையில் பெறும் வெத்து வெற்றிகள் நமக்குத் தேவையில்லை. அரசியல் தலையீடும், சிலபல தனிநபர்களின் சுயநலன்களையும் களைந்தால்தான் உருப்படும். நம் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே இருண்ட காலம். என் இருதயத்திலிருந்து ரத்தம் கசிகிறது. திறமையற்றவர்கள் அணியிலிருந்தும் நிர்வாகத்திலிருந்தும் நீக்கப்பட வேண்டும்.” என்று பொரிந்து தள்ளியுள்ளார்.

இந்த கிழிப்புகளுக்குப் பதிலடி கொடுத்த ஷதாப் கான், “நம் முன்னாள் வீரர்களுக்கு கருத்துக்கள் இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானுக்காக நன்றாக ஆடியவர்கள். ஆனால் கடைசியில் பார்த்தால், அவர்களும் கூட உலகக்கோப்பைகளில் இந்தியாவை வீழ்த்தியதில்லை.

2021 உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது நாங்களே, இந்த அணியே. இந்தியாவை ஒரேஒருமுறைதான் நாம் உலகக்கோப்பைகளில் தோற்கடித்துள்ளோம். விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள் லெஜண்ட்கள் தான் மறுக்கவில்லை. ஆனால் அவர்களும் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஒன்றும் கிழித்துவிட முடியவில்லை.” என்று ஷதாப் கான் ஒரு பதிலடி கொடுத்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது இருண்ட காலமா? - விமர்சனங்களுக்கு ஷதாப் கான் பதிலடி
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக - ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in