

சென்னை: வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.19) காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்த பின்னர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி நீண்ட நாட்களாக நிலவிவந்தது. அதன்படி, இன்று திமுகவுடன் தேமுதிக கூட்டணியை உறுதி செய்துள்ளோம்.
தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பியடிய திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேமுதிக முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2016-லேயே இந்தக் கூட்டணி அமைந்திருக்க வேண்டும். பழம் நழுவி பாலில் விழும் என்று கருணாநிதி கூறியிருந்தார். ஆனால், அது இப்போது கேப்டன் இல்லாதபோது தாமதமாக நடந்துள்ளது.
மற்றபடி இந்தத் தேர்தலில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் போன்றவை எல்லாம் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு திமுகவுடன் ஆலோசனை செய்தபின்னர் முறைப்படி அறிவிப்பு வெளியாகும்.
இந்தக் கூட்டணி தேமுதிகவினர், பொது மக்களும் வரவேற்கும் கூட்டணியாக உள்ளது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து எல்லாம் அண்ணன் ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார்” என்றார் பிரேமலதா.
தேமுதிக கடந்து வந்த பாதை: கடந்த 2011-ம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தான் எதிர்கொண்ட முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே 29 எம்எல்ஏ.க்களுடன் வலுவான அரசியல் பயணத்தைத் தொடங்கியது.
ஆனால், அதன்பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்கள் நலக் கூட்டணியாக களம் கண்டு தோல்வியை சந்தித்தது.
2021-ல் அமமுக, எஸ்டிபிஐ கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.
இந்நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. வரும் தேர்தலில் 7 தொகுதிகள் வரையிலும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.