

ஞாயிற்றுக்கிழமை வான்கடே மைதானத்தில், மும்முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், டி20 உலகக் கோப்பை சாம்பியன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இம்பாக்ட் வீரராகக் களமிறங்கினார். 14 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக தன் முதல் போட்டியில் நேற்று கொல்கத்தாவை வென்றது.
பிரச்சினை அதுவல்ல, டி20 உலகக் கோப்பை வென்ற சூரியகுமார் யாதவ்வை இம்பாக்ட் பிளேயராக இறக்கி அதிர்ச்சியளித்தனர் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தினர். கேகேஆர் பேட் செய்த போது சூரியகுமார் யாதவ் பெஞ்ச்சில் இருந்தார். அப்போதே தெரிந்தது அவர் இம்பாக்ட் பிளேயராக இறங்கக் கூடும் என்பது. ஆனால் வெற்றி கேப்டனை இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாகப் பயன்படுத்தியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனேவிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்ட போது ஜெயவர்தனே, இது தொடர்பாக விரும்பத்தகாத கதைகளை எழுத வேண்டாம் என்றார். “விரும்பத் தகாத கதைகளை நீங்கள் உருவாக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். எங்கள் அணி மகிழ்ச்சியாக உள்ளது. சூரியா எங்களுடன் இணைந்தார்.
அவருக்கு லேசான காயம் இருந்தது. அவர் பீல்டிங் உட்பட அனைத்தையுமே செய்தார். இந்தப் போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் இன்னும் 5 நாட்கள் உள்ளன. எனவே அவருக்கு சிறு காயத்திலிருந்து மீள கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டியிருந்தது. அவரே 3-4 ஓவர்கள் இருக்கும் போது இறங்குவதாக அவரே கூறினார். நான் வேண்டாம் என்றேன்.
அப்புறம் ஓகே. தயவு கூர்ந்து எதையாவது கதை கட்டி விடாதீர்கள். நான் முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன். இந்த சீசன் முழுதும் விளையாடும் மிக முக்கிய வீரர்கள் இவர்கள், எனது கணக்கீடுக்குட்பட்ட சில முடிவுகளில் ஒன்றுதான் இது. இதைத்தாண்டி எதுவும் இல்லை. ”என்றார். சூரியகுமார் நேற்று 8 பந்துகளில் 16 ரன்களுடன் கார்த்திக் தியாகி பந்தில் ஆட்டமிழந்தார்.