‘சின்ன பையனிடம் ஆவேசம் காட்டுவதா?’ - சூரியவன்ஷிக்கு ‘சென்ட் ஆஃப்’ கொடுத்த ஜேமிசனுக்கு எச்சரிக்கை!

‘சின்ன பையனிடம் ஆவேசம் காட்டுவதா?’ - சூரியவன்ஷிக்கு ‘சென்ட் ஆஃப்’ கொடுத்த ஜேமிசனுக்கு எச்சரிக்கை!
Updated on
1 min read

ஐபிஎல் சென்சேஷன் என்று அழைக்கப்படும் 15 வயது வைபவ் சூரியவன்ஷியை நேற்று பவுல்டு செய்த டெல்லி கேப்பிடல்ஸின் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைலி ஜேமிசன் அளவுக்கு மீறி ஆக்ரோஷம் காட்டி சூரியவன்ஷிக்குப் ‘பிரியாவிடை’ கொடுத்தது சர்ச்சையாகியுள்ளது. இதனையடுத்து கைலி ஜேமிசன் ஒரு தரமதிப்புப் புள்ளியை இழக்கிறார்.

ஐபிஎல் 2026 தொடரின் 43-வது போட்டி நேற்று சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் நடந்த சம்பவம் தொடர்பாக, ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ஜேமிசன் ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் ஒன்றாம் லெவல் விதியை மீறியதாக கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் பிரிவு 2.5 படி, மற்றொரு வீரரை தூண்டக்கூடிய வகையில் பேசுதல் அல்லது சைகை காட்டுதல் குற்றமாக கருதப்படுகிறது. இந்த விதியை மீறியதாக ஜேமிசன் ஒப்புக்கொண்டு, போட்டி நடுவர் ராஜீவ் சேத் விதித்த தண்டனையை ஏற்றுக்கொண்டார்.

இந்த சம்பவம் முதல் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் நடந்தது. அப்போது வெறும் 15 வயதான சூர்யவன்ஷியை யார்க்கர் வீசி பவுல்டு அவுட் செய்த பிறகு, ஜேமிசன் அவரை நோக்கி ஆவேசமாக சென்றார்.

வைபவ் சூரியவன்ஷியின் விக்கெட் அந்தத் தருணத்தில் பெரிய விக்கெட் தான். இதனை மறுக்க முடியாது, ஆனாலும் 15 வயது சிறுவரிடம் இப்படியா நடந்து கொள்வது என்று கிரிக்கெட் ரசிகர்கள் நேற்று முதல் தங்கள் கடும் அதிருப்தியை ஜேமிசன் மீது வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜாகீர் கான் ஒருமுறை மேத்யூ ஹெய்டன் விக்கெட்டை வீழ்த்திய பிறகு அசிங்கமாக அவரைப் பார்த்து ஏதோ செய்கை செய்தார். அப்போதும் ஜாகீர் கானுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது இயன் சாப்பல் ஒன்று கூறினார். கிரீசில் நிற்கும் போதுதான் பேட்டரை ஸ்லெட்ஜ் செய்யலாம். அதில் ஒரு வகையான நியாயம் இருக்கிறது, அவரை செட்டில் ஆக விடாமல் தடுக்கும் உத்தி என்று கூறலாம், ஆனால் அவுட் ஆன வீரரை இழிவாக செய்கை காட்டுவது அநாகரிகம் என்றார்.

கைலி ஜேமிசன் நேற்று அதைத்தான் செய்தார். ஆனால் தன் தவறை ஒப்புக் கொண்டார். அதுவும் சின்னப் பையன், வளர்ந்து வரும் ஓர் இளம் வீரரிடம் தன் வீரத்தைக் காட்டுவதா என்றே ரசிகர்கள் ஜேமிசனைக் கண்டித்து வருகின்றனர்.

‘சின்ன பையனிடம் ஆவேசம் காட்டுவதா?’ - சூரியவன்ஷிக்கு ‘சென்ட் ஆஃப்’ கொடுத்த ஜேமிசனுக்கு எச்சரிக்கை!
ராஜஸ்தான் ராயல்ஸ் தவறு செய்தது எங்கே?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in