அமெரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் - பங்கேற்பதில் கவலை கொண்டுள்ள ஈரான்!

அமெரிக்காவில்  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் - பங்கேற்பதில் கவலை கொண்டுள்ள ஈரான்!
Updated on
2 min read

அமெரிக்க - ஈரான் போர்ப்பதற்றங்கள் தணியாத நிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைக் கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அங்கு செல்வது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அங்கு தங்கள் அணியினர் எப்படி நடத்தப்படுவார்கள் என்பது குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஈரான் காலபந்துக் கூட்டமைப்பின் தலைவர் மெஹதி தாஜ் 2026 உலகக்கோப்பைக் கால்பந்துத் தொடரில் ஈரான் அணி “நிச்சயமாக” பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், போட்டியை நடத்தும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள், ஈரான் அணியின் பயணம் மற்றும் அணிக்கு வழங்கப்படும் அணுகுமுறை தொடர்பான கவலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, “அனைத்து வீரர்களும் தொழில்நுட்ப குழுவினரும், குறிப்பாக Islamic Revolutionary Guard Corps அமைப்பில் கட்டாய ராணுவ சேவை செய்தவர்கள், எந்த சிக்கலும் இல்லாமல் விசா பெற வேண்டும்” என்று மெஹதி தாஜ் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலுக்கு பிறகு தற்போது மெத்தனமான போர்நிறுத்த நிலை தொடர்கிறது.

அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத் தடையாலும் ஈரான் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு செய்தி நிறுவனம் IRNA வெளியிட்ட அறிக்கையில், விசா, பாதுகாப்பு மற்றும் ஈரான் வீரர்கள், அதிகாரிகள் மீதான அணுகுமுறை குறித்து உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாகவும், “எங்கள் நம்பிக்கைகள், கலாசாரம் மற்றும் கொள்கைகளில் இருந்து பின்வாங்காமல் உலகக்கோப்பையில் பங்கேற்போம்” என்றும் தாஜ் கூறியுள்ளார்.

இதற்கு முன் கடந்த மாதம், கனடா நாட்டில் நடைபெற்ற உலகக் கால்பந்து கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க தாஜ்க்கு அனுமதி மறுக்கப்பட்டது. புரட்சிகர இஸ்லாமியக் காவற்படை உடனான அவரது பழைய தொடர்புகளே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. அந்த அமைப்பை அமெரிக்காவும் கனடாவும் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரான் தேசியக்கொடி, தேசிய கீதம் மற்றும் அதிகாரிகளுக்கு உலகக்கோப்பை போட்டியின் போது மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தாஜ் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இந்த விவகாரம் ஈரான் அணியின் முக்கிய வீரரான மெஹ்தி தாரேமி மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அணித்தலைவரும் முன்னணி ஸ்டிரைக்கருமான தாரேமி, தனது கட்டாய ராணுவ சேவையை நிறைவு செய்திருந்தார். ஈரானில் கட்டாய ராணுவ சேவைக்கு அழைக்கப்படுவோர் காவல்துறை அல்லது ராணுவத்திற்கும் சீரற்ற முறையில் நியமிக்கப்படுவது வழக்கம்.

ஈரான் அணி, ‘ஜி’ பிரிவில் பெல்ஜியம், நியூஸிலாந்து மற்றும் எகிப்து அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகிலுள்ள இங்கில்வுட் நகரில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. ஈரான் தொடர்ந்து நான்காவது முறையாகவும், மொத்தம் ஏழாவது முறையாகவும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் இதுவரை ஒருபோதும் குரூப் ஸ்டேஜைச் சுற்றைத் தாண்டி முன்னேறியதில்லை. உலக தரவரிசையில் தற்போது 21ஆவது இடத்தில் உள்ள ஈரான், ஆசிய தகுதிச்சுற்றில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில்  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் - பங்கேற்பதில் கவலை கொண்டுள்ள ஈரான்!
எதிரெதிரே விஜய், உதயநிதி முதல் சான்றிதழை மறந்த கீர்த்தனா வரை - பேரவையின் முதல் நாள் ஹைலைட்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in