

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆணி வேராகக் கருதப்படும் ஹர்திக் பாண்டியா ரூ.18 கோடி தொகையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், அதே ரூ.18 கோடி தொகையில் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் முறையே பரிமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2024-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அதேவேளையில் 2019 முதல் அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குத்தான் ஆடி வந்தார். இப்போது இருவரும் பரஸ்பர அணிப் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.
இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஜோடியாக வீசுவதைக் காணலாம். ட்ரெண்ட் போல்ட் ஐபிஎல் மினி ஏலத்தின்போது விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்திக் 18 கோடி ரூபாய் ஊதியத்துக்கு பிபிகேஎஸ் (PBKS) அணியில் சேருவார் (இது அவரது தற்போதைய ஊதியமான 16.35 கோடி ரூபாயில் இருந்து அதிகம்). அதே சமயம், அர்ஷ்தீப் தனது தற்போதைய ஊதியமான 18 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் சேருவார் என்று ஐபிஎல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டியா மும்பையை விட்டு நகர்ந்துள்ளார் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
பஞ்சாப் கிங்ஸ் ஹர்திக் பாண்டியாவின் 3-வது ஐபிஎல் அணியாகும். 2015-ல் மும்பை இந்தியன்ஸில் அறிமுகமானார், 2022-ல் இரண்டு சீசன்களுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸை வழிநடத்தினார். 2024-ல் மீண்டும் மும்பை இந்தியன்ஸுக்குத் திரும்பினார். 5 முறை ஐபிஎல் சாம்பியன் அணியில் இருந்துள்ளார். 4 முறை மும்பை இண்டியன்ஸ் அணியிலும் ஒருமுறை குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் பட்டம் வெல்லும் முகமாக இருந்துள்ளார்.
2024-ல் பாண்டியா கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் ஆகக் கீழ்நிலைக்குச் சரிந்தது. ஆனால் 2025-ல் பிளே ஆஃப் சுற்றுக்கு வந்தது. ஆனால் மீண்டும் 2026-ல் கடைநிலைக்குச் சரிந்தது.
2024 முதல் மொத்தம் 39 போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 24 போட்டிகளில் தோல்வி கண்டு 15 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மாறாக, அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 8 சீசன்கள் ஆடிவிட்டார். 111 விக்கெட்டுகள் என்னும் சாதனையையும் படைத்தார்.