

மும்பை: தீபாவளிக்குப் பிந்தைய வர்த்தகத்திலும் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பேரெழுச்சி நீடித்து வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 1,097.33 புள்ளிகள் ஏற்றம் கண்டு 82,186.92 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 274.30 புள்ளிகள் உயர்ந்து 25,317.55 ஆக இருந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு நிலவும் சூழலிலும், ஆசிய பங்குச் சந்தையில் கலவையான போக்கு காணப்படும் நிலையில், இந்தியப் பங்குச் சந்தையில் தீபாவளிக்கு முந்தைய வர்த்தக தினங்களில் தொடங்கிய எழுச்சி தொடர்ந்து நீடித்து வருவதால் பெரும்பாலானா முதலீட்டாளர்கள் நல்ல லாபம் கிட்டி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் சென்செக்ஸ் 908.13 புள்ளிகள் உயர்ந்து 82,014.78 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 240.05 புள்ளிகள் உயர்ந்து 25,284.70 ஆகவும் இருந்தது.
பல மாதங்களுக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் புதிய உச்சங்களைத் தொட்டு வருவதற்கு, அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை 92 டாலர் ஆக குறைந்திருப்பதும் முக்கிய காரணம்.
குறிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து இந்திய பங்குச் சந்தைக்கு வெகுவாக உயர்ந்திருப்பதும் இந்த எழுச்சிக்கு முக்கிய காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் ஏஐ பங்குகளில் சரிவு ஏற்பட்டது. இதனால் உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்களின் பார்வையை பாதுகாப்பான இந்தியப் பெரு நிறுவனங்களின் பங்குகள் பக்கம் திருப்பியுள்ளனர். உலகளாவிய முதலீட்டாளர்கள், செயற்கை நுண்ணறிவு தொடர்பான வர்த்தகங்களில் இருந்து தங்கள் பணத்தை மாற்றியதால், இந்திய பங்குச் சந்தையில் முதலீடு அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் புதன்கிழமை வர்த்தகத்தில் மாருதி சுசுகி, அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், எம் அண்ட் எம், இந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றம் கண்டிருந்தன.
அதேவேளையில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.