

மும்பை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 240 இந்திய வீரர்கள் உட்பட 350 பேர் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஏலத்துக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் 240 பேர், வெளிநாட்டு வீரர்கள் 110 பேர் என மொத்தம் 350 பேர் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக் கடைசி நேரத்தில் ஏலப்பட்டியலில் இணைந்துள்ளார். அவரது அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கடைசியாக அவர், ஐபிஎல் தொடரில் 2021-ம் ஆண்டு விளையாடி இருந்தார். ஸ்டீவ் ஸ்மித்தின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஏலத்துக்காக 1,390 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதன் பின்னர் இந்த பட்டியல் 1,055 பேர் கொண்டதாக சுருக்கப்பட்டது. இதில் இருந்து தற்போது 350 ஆக குறைக்கப்பட்டு இறுதிப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 350 வீரர்களில் இருந்து 10 அணிகளின் உரிமையாளர்களும் ஒட்டுமொத்தமாக 77 பேரை ஏலம் எடுப்பார்கள்.
இந்த 77 பேரில் 31 பேர் வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். ஏலத்தில் முதல் செட்டில் இந்தியா மற்றும் மும்பை பேட்ஸ்மேன்களான பிரித்வி ஷா மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் இடம் பெறக்கூடும். இருவரின் அடிப்படை விலையும் தலா ரூ.75 லட்சமாக உள்ளது.
பிரித்வி ஷா 2018 முதல் 2024 வரை ஐபிஎல்லில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இதனால் கடந்த சீசனில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சர்பராஸ் கான் 2021-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ் ஐயரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் அதிக ரன்களும், விக்கெட்களையும் கைப்பற்றியுள்ள உள்ளூர் வீரர்களான குணால் சந்தேலே, அசோக் குமார் உள்ளிட்டோரும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஏலப்பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜேமி ஸ்மித், வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன், டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் டென் டக்கெட் உள்ளிட்ட 21 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோன்று ஆஸ்திரேலியாவைச் சேந்த ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், ஜேக் பிரேஸர் மெக்கர்க், ஜோஷ் இங்லிஷ், மேத்யூ ஷார்ட், கூப்பர் கானொலி, பியூ வெப்ஸ்டர் உள்ளிட்ட 19 பேரும் இடம் பெற்றுள்ளனர். இதில் கேமரூன் கிரீன், ஜேக் பிரேஸர் மெக்கர்க் ஆகியோரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டேவிட் மில்லர், குயிண்டன் டி காக், அன்ரிச் நோர்க்கியா, லுங்கி நிகிடி, ஜெரால்டு கோட்ஸி, வியான் முல்டர் உள்ளிட்ட 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், அக்கீம் அகஸ்தே, ஷாய் ஹோப், ராஸ்டன் சேஸ் உள்ளிட்ட 9 வீரர்களும் ஏலப்பட்டியலில் உள்ளனர்.
இலங்கையை சேர்ந்த வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, தீக் ஷனா, டிரவீன் மேத்யூ, பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரேரா உள்ளிட்ட 12 வீர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நியூஸிலாந்தை சேர்ந்த டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட 16 பேரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ், நவீன் உல் ஹக் உள்ளிட்ட 10 பேரும் இறுதிப் பட்டியலில் உள்ளனர்.
வீரர்களை ஏலம் எடுக்க உள்ள அணிகளில் அதிகபட்சமாக 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.64.3 கோடியை இருப்பு வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.43.4 கோடியையும், 2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.25.5 கோடியையும் இருப்பு வைத்துள்ளன.