

தமிழக கிரிக்கெட் வீராங்கனை கமலினி
புதுடெல்லி: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குணாளன் கமலினி, வைஷ்ணவி சர்மா ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மகளிர் அணி கிரிக்கெட் அணி அடுத்த வார இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் டிசம்பர் 21 முதல் 30 வரை நடைபெற உள்ளது. முதல் 2 ஆட்டங்கள் விசாகப்பட்டினத்திலும், கடைசி 3 ஆட்டங்கள் திருவனந்தபுரத்திலும் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயதான விக்கெட் கீப்பர் பேட்டரான குணாளன் கமலினி அறிமுக வீராங்கனையான சேர்க்கப்பட்டுள்ளார். கமலினி, மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 9 ஆட்டங்களில் விளையாடி இருந்தார்.
19 வயதான வைஷ்ணவி சர்மாவுக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ராதா யாதவ், உமா சேத்ரி ஆகியாருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரும், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். மற்றபடி அணியில் பெரிய அளவிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. ஷபாலி வர்மா காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஸ்னே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிரந்தி கவுடு, ரேணுகா சிங் தாக்குர், ரிச்சா கோஷ், ஜி.கமலினி, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி சர்மா.