பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு தடைபோடுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? - முலான்பூரில் இன்று பலப்பரீட்சை

பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு தடைபோடுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? - முலான்பூரில் இன்று பலப்பரீட்சை
Updated on
2 min read

முலான்பூர்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகர் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. நடப்பு சீசனில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி பஞ்சாப் கிங்ஸ் மட்டுமே. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸை தோற்கடித்து இருந்தது. அந்த ஆட்டத்தில் 265 ரன்கள் இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்று மிரளச் செய்திருந்தது பஞ்சாப் அணி.

பிரப் சிம்ரன் சிங் 26 பந்துகளில் 76 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 36 பந்துகளில், 71 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். முன்னதாக இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் கூட்டணி பவர் பிளேவில் 116 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தது. இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.கூப்பர் கானொலி, நேகல் வதேரா, ஷசாங் சிங் ஆகியோரும் அதிரடியாக விளையாடி பலம் சேர்க்கக்கூடியவர்கள்.

கடந்த பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் விராட் கோலி தனது தொடர்ச்சியான உயர்மட்ட செயல் திறன்களால் ‘சேஸ்-மாஸ்டர்’ என்ற பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டார். தற்போது அதே பாதையில் ஸ்ரேயஸ் ஐயர் பயணிக்கத் தொடங்கி உள்ளார். கேப்டனாகவும், பேட்டராகவும், பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் இதுவரை தோல்வியடையாமல் இருப்பதற்கு, அதிக அழுத்தம் நிறைந்த சூழல்களில் ஸ்ரேயஸ் ஐயர் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டமே முக்கியக் காரணமாகும்.

இதனால் இன்றைய ஆட்டத்திலும் ஸ்ரேயஸ் ஐயர், ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடும். ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் குவித்து பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசியாக அந்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

அந்த ஆட்டத்தில் 228 ரன்களை குவித்த போதிலும் மோசமான பீல்டிங் காரணமாக ராஜஸ்தான் அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஹைதராபாத் அணியின் அதிரடி வீரரான அபிஷேக் சர்மா 4 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை ஷிம்ரன் ஹெட்மயரும், 30 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை ரவீந்திர ஜடேஜாவும் தவறவிட்டனர். இதற்கான பலனை ராஜஸ்தான் அணி அனுபவித்து இருந்தது. இதனால் அந்த அணி பீல்டிங்கில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் வைபவ் சூர்யவன்ஷி சிறந்த பார்மில் உள்ளார். கடந்த ஆட்டத்தில் 37 பந்துகளில் 103 ரன்கள் விளாசிய அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். அதேவேளையில் ரியான் பராக்கின் பார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. நடப்பு சீசனில் அவர், 8 ஆட்டங்களில் விளையாடி 88 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் ரியான் பராக் ரன்கள் குவிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முலான்பூர் ஆடுகளத்தில் இந்த சீசனில் பஞ்சாப் அணி இதுவரை விளையாடி உள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக இந்த மைதானத்தில் கடந்த 19-ம் தேதி லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி 254 ரன்கள் குவித்து மிரட்டியிருந்தது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு தடைபோடுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? - முலான்பூரில் இன்று பலப்பரீட்சை
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in