

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2026 தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 226 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சவாய் மான்சிங் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (மே 1) நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்குத் தொடக்கம் அதிர்ச்சிகரமாக அமைந்தது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (4) மற்றும் யஷஸ்வி ஜெய்சவால் (6) ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், கேப்டன் ரியான் பராக் (90 ரன்கள், 50 பந்துகள்) மற்றும் துருவ் ஜூரெல் (42) ஜோடி 102 ரன்கள் சேர்த்து அணியை மீட்டனர். இறுதி நேரத்தில் டோனோவன் ஃபெரைரா வெறும் 14 பந்துகளில் 47 ரன்கள் (6 சிக்ஸர்கள்) விளாச, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
226 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் மற்றும் பதும் நிஸங்கா ஜோடி அசுர வேகத் தொடக்கம் அளித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவர்களில் 110 ரன்கள் சேர்த்தது. பதும் நிஸங்கா 33 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் கே.எல். ராகுல் 40 பந்துகளில் 75 ரன்கள் (6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) குவித்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.
நடுவரிசையில் நிதிஷ் ராணா (33) அதிரடி காட்ட, கடைசி ஓவர்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (18) மற்றும் அசுதோஷ் சர்மா (25) ஜோடி நிதானமாக விளையாடி இலக்கை எட்டினர். டெல்லி அணி 19.1 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி தனது மூன்று போட்டிகள் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆட்டநாயகனாக கே.எல். ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.