ஸ்ரேயஸ் அதிரடி சதம்: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்

ஸ்ரேயஸ் அதிரடி சதம்: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்
Updated on
1 min read

லக்னோ: ஐபிஎல் 2026 தொடரின் 68-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்  அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோவின் ஏகானா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸின் அதிரடியான 72 ரன்கள் (44 பந்துகள், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்) மற்றும் ஆயுஷ் பதோனியின் விரைவான 43 ரன்கள் (18 பந்துகள், 3 சிக்ஸர்கள்) ஆகியவற்றின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இறுதி ஓவர்களில் அப்துல் சமத் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் மார்கோ ஜான்சன் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து 197 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் மிரட்டலாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்ததுடன், 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

பஞ்சாப் அணி 18 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி, தங்களது பிளே-ஆஃப் சுற்றுக்கான தகுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மறுபுறம், இந்தத் தோல்வியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த சீசனுடன் தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in