

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. டாப் ஆர்டர் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். நடுவரிசையில் சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, கார்த்திக் சர்மா ஆகியோரும் ஏமாற்றம் அளித்தனர்.
8-வது வீரராக களமிறங்கிய ஜேமி ஓவர்டன் 43 ரன்கள் சேர்த்ததன் காரணமாக சிஎஸ்கே அணியால் அந்த ஆட்டத்தில் 100 ரன்களை கடக்க முடிந்தது. பந்துவீச்சிலும் சிஎஸ்கே அணி உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறியது. ராஜஸ்தான் அணியின் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தனது தாக்குதல் ஆட்டத்தால் மேட் ஹென்றி, கலீல் அகமது, நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன் ஆகியோரை உள்ளடக்கிய ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் பந்துவீச்சையும் கடும் சிதைவுக்கு உட்படுத்தியிருந்தார்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறையிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றியை வசப்படுத்த முடியும். சேப்பாக்கம் ஆடுகளம் கடந்த மாதம் நிறைவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரின் போது முற்றிலும் ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்தது. அதேவளையில் சுழற்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. இதே நிலையே தற்போதும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் தோனி, டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் காயம் காரணமாக களமிறங்காதது ஆட்டத்தின் செயல்திறனிலும், முடிவிலும் பிரதிபலித்தது. தோனி 2 வாரங்களுக்கு விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் டெவால்ட் பிரேவிஸின் காயத்தின் தன்மை குறித்து இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை. ஒருவேளை அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினால் அது சிஎஸ்கே அணிக்கு பலமாக இருக்கும்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் விஜயகுமார் வைஷாக் ஷாட்பால் உத்தியில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். யுவேந்திர சாஹல், மார்கோ யான்சன் ஆகியோரும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தியிருந்தனர்.
பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான கூப்பர் கானொலி 44 பந்துகளில் 72 ரன்களை விளாசி தனிப்பட்ட பேட்ஸ்மேனாக போராடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்திறன் வெளிப்படக்கூடும். தொடக்க வீரரான பிரியன்ஸ் ஆர்யா கடந்த ஆண்டு சிஎஸ்கேவுக்கு எதிராக 42 பந்துகளில் 103 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார்.
இம்முறையும் அவர், சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். கடந்த ஆட்டத்தில் பெரிய அளவில் சோபிக்காத பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயஸ் ஐயர், நேகல் வதேரா, ஷசாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் மட்டையை சுழற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பின்வரிசையில் மார்கோ யான்சன் தனது தாக்குதல் ஆட்டத்தால் பலம் சேர்க்கக்கூடும்.
சேப்பாக்கில் இதுவரை..
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இதுவரை ஐபிஎல் தொடரில் 146 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 74 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி வெற்றி கண்டுள்ளது. 70 ஆட்டங்களில் இலக்கை துரத்திய அணி வெற்றி பெற்றுள்ளது.