நூர் அஹமது அசத்தல்: கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி

நூர் அஹமது அசத்தல்: கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி
Updated on
1 min read

சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணிக்குத் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். இதில் ருதுராஜ் 7 ரன்களில் வெளியேறினாலும், கடந்த போட்டியின் சதம் தந்த உத்வேகத்துடன் ஆடிய சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 48 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தார்.

அவருக்குத் துணையாக டெவால்ட் பிரெவிஸ் 41 ரன்களும், ஆயுஷ் மத்ரே அதிரடியாக 17 பந்துகளில் 38 ரன்களும் சேர்த்தனர். இதன் பலனாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. கொல்கத்தா தரப்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இம்பாக்ட் வீரரான ஃபின் ஆலன் ஒரே ரன்னின் வெளியேறினார். சிஎஸ்கே பவுலர்களின் துல்லியமான தாக்குதலால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹமது, தனது 4 ஓவர்களில் வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

ரமன்தீப் சிங் (35) மற்றும் ரோவ்மன் பவல் (31) ஜோடி 63 ரன்கள் சேர்த்துப் போராடிய போதிலும், அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய நூர் அஹமது ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துள்ளது. மறுபுறம், இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியைக் கூடப் பெறாமல் கொல்கத்தா அணி இக்கட்டான நிலையில் உள்ளது. எம்.எஸ் தோனி காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நூர் அஹமது அசத்தல்: கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி
சேப்பாக்கம் வலைப்பயிற்சியில் தோனி: தாமதமாகும் மேட்ச் ஃபிட்னெஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in