

புதுடெல்லி: பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி காயம் அடைந்துள்ளதால் அந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளராக இருப்பவர் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆவார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் மருமகன் தான் இந்த ஷாஹீன் ஷா அப்ரிடி. இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் கிரிக்கெட் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காபா நகரில் நடைபெற்ற பிரிஸ்பேன் ஹீட், அடிலெய்டு ஸ்டிரைக்கர் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஷாஹீன் ஷா அப்ரிடி காயமடைந்தார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில் அவரது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தொடர்ந்து பிக் பாஷ் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் பிக்பாஷ் டி20 தொடரிலிருந்து விலகுவதாக பிரிஸ்பேன் ஹீட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. அவர் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்பி சிகிச்சை பெற உள்ளார். சிகிச்சை முடிந்த பின் டி20 உலகக் கோப்பை போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஷாஹீன் ஷா அப்ரிடி கூறும்போது, “பிக் பாஷ் கிரிக்கெட் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடுவதை மிகவும் விரும்பினேன். அனைத்து லீக் போட்டிகளிலும் நான் உற்சாகமாக பங்கேற்றேன். காயம் அடைந்துள்ளதால் போட்டித் தொடரின் இறுதி வரை பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வருந்துகிறேன்” என்றார்.