

லாசேன்: எப்ஐஹெச் மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை வரும் ஜூன் 15 முதல் 21-ம் தேதி வரை நியூஸிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், கொரியா, சிலி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
ஹாக்கி புரோ லீக்கில் பங்கேற்காத அதேவேளையில் தரவரிசையில் முன்னணியில் உள்ள அணிகளுக்கு உயர்தரப் போட்டிகளை வழங்குவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு எப்ஐஹெச் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை தொடர் தொடங்கப்பட்டது. இதில் வெற்றி பெறும் அணிக்கு, அடுத்த சீசனில் புரோ லீக்கிற்குத் தகுதி பெறும் வாய்ப்பு வழங்கப்படும்.
கடந்த 2024-25-ம் ஆண்டு நடைபெற்ற புரோ லீக் தொடரில் 9 அணிகள் பங்ககேற்ற நிலையில் இந்திய மகளிர் அணி கடைசி இடத்தைப் பிடித்திருந்தது. இதனால் இந்திய மகளிர் ஹாக்கி அணி அந்தத் தொடரிலிருந்து தரம் இறக்கப்பட்டது. தற்போது நேஷன்ஸ் கோப்பையில் கலந்து கொள்ளும் இந்திய அணி அதில் வெற்றி பெறும் பட்சத்தில் மீண்டும் ஹாக்கி புரோ லீக்கில் கால்பதிக்க முடியும்.
எப்ஐஹெச் ஆடவர் நேஷன்ஸ் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் வரும் ஜூன் 11 முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பிரான்ஸ், கொரியா, ஜப்பான், வேல்ஸ், மலேசியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.