

இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா
கடந்த காலத் தடைகள், மன உளைச்சல், புற்றுநோயால் அவதிப்படும் தந்தை என அனைத்து கவலைகளையும் தாண்டி, பகவத் கீதையின் தத்துவத்தை வாழ்வியலாக மாற்றி ஜப்பான் ஆசிய விளையாட்டு போட்டி குத்துச்சண்டையில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனையான பர்வீன் ஹூடா.
சீனாவின் ஹாங்சோவில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் பர்வீன் ஹூடா. ஆனால், இருப்பிட விவரங்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட சிறு நடைமுறைத் தவறு காரணமாக அந்தப் பதக்கம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு 22 மாத தடை விதிக்கப்பட்டதால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியையும் அவர் தவறவிட நேர்ந்தது.
இந்த சோதனை காலம் குறித்துப் பேசிய பர்வீன் ஹூடா, ‘‘ஹாங்சோ ஆசிய விளையாட்டு பதக்கம் பறிக்கப்பட்ட பின்னர் எனது உலகம் இருண்டுவிட்டது போல் இருந்தது. எல்லாமே முடிந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால், சிறிய தவறுக்காக என் வாழ்வை இழக்கத் தயாராக இல்லை. பூஜ்ஜியத்தில் இருந்து என் பயணத்தை மீண்டும் தொடங்கினேன்” என்று தெரிவித்தார்.
தடையிலிருந்து மீண்டு வந்த அவர், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளின் காலிறுதியில் தோல்வியைச் சந்தித்தது மீண்டும் ஒரு பெரும் சோகத்தை அளித்தது. எனினும் கடந்த நான்கு ஆண்டுகளாகப் புற்றுநோய் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தை லாக்பத் ஹூடாவுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் நோக்கில் மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
“2023 ஆசிய விளையாட்டு போட்டிக்குச் செல்லும்போது எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவமனையில் விட்டுவிட்டு நான் அழுதுகொண்டேதான் போட்டிக்குச் சென்றேன்” என்று நினைவுகூரும் பர்வீன் ஹூடா, பறிபோன வெண்கலப் பதக்கத்தை தனது வீட்டின் சுவரில் மாட்டி வைத்திருந்தார்.
பதக்கத்தின் நிறத்தை தங்கமாக மாற்றுவேன் என்ற வெறியோடு அதைப் பார்த்துக் கடின உழைப்பை கொடுத்தேன். இன்று அந்தப் பதக்கம் தங்கமாகவே என் கைக்கு வந்துவிட்டது” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் காவல் துறை உதவி ஆய்வாளராக உள்ள பர்வீன் ஹூடா.
கடுமையான மன உளைச்சலில் இருந்த காலகட்டத்தில், பகவத் கீதையே தனக்கு மன அமைதியைத் தந்தது என்று பர்வீன் ஹூடா குறிப்பிட்டார். “குத்துச்சண்டை எனக்குப் பலவற்றைக் கொடுத்துள்ளது. எனவே, கீதையில் சொல்லப்பட்டுள்ள ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்ற தத்துவத்தை என் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டேன்.”
“முடிவைப் பற்றி கவலைப்படாமல் என் பயிற்சியில் முழுமையான அர்ப்பணிப்பைக் கொடுத்தேன். இதனால் நான் மனதளவில் எப்போதும் ஒரு நடுநிலையான, உறுதியான நிலையில் இருக்க முடிந்தது” என்றார்.
தற்போதைய வெற்றியைத் தொடர்ந்து குடும்பத்துடன் சிறிது நேரம் செலவழிக்க முடிவு செய்துள்ள பர்வீன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிகளில் முழுமூச்சாக ஈடுபடத் திட்டமிட்டுள்ளார். தடைகளைத் தகர்த்து எழுந்துள்ள பர்வீன் ஹூடாவின் இந்த வெற்றிப் பயணம் இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு பெருமைமிகு மைல்கல்லாகும்.