

படம்: நா:தங்கரத்தினம்
சென்னை/மதுரை: 14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மதுரை ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் - நமீபியா அணிகள் மோதின.
இதில் ஸ்பெயின் 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அவிலா புரூனோ 4 கோல்கள் (5, 23, 47 மற்றும் 58-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். ஆன்ட்ரெஸ் மெதினா (7 மற்றும் 27-வது நிமிடங்கள்), ஜோசப் மார்ட்டின் (44 மற்றும் 59-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களும், ஆல்பர்ட் செராகிமா (15-வது நிமிடம்), நிகோலஸ் மஸ்டரோஸ் (37-வது நிமிடம்), டன் மோரான் (41-வது நிமிடம்), அலெக்ஸ் போஸால் (54-வது நிமிடம்), அமத் பெரே (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். ஸ்பெயின் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி ‘டி’ பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இரவு 8.30 மணிக்கு ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மன்மீத் சிங் (2 மற்றும் 11-வது நிமிடம்), ஷரதா நந்த் (13 மற்றும் 54-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்து அசத்தினர். அர்ஷ்தீப் சிங் (28-வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.
இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் சிலி அணியை 7-0 என்ற கோல் கணக்கிலும், ஓமனை 17-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியிருந்தது. லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி 9 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
‘இ’ பிரிவில் நெதர்லாந்து - ஆஸ்திரியா அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் கேப்டன் காஸ்பர் வான்டெர் வீன் 3 கோல்கள் (48, 53 மற்றும் 54-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார்.
ஃபின் வேன் பிஜ்னேன் 2 கோல்களும் (21 மற்றும் 35-வது நிமிடங்கள்), காஸ்பர் ஹஃப்கேம்ப் (27-வது நிமிடம்), ஜோப் வால்பெர்ட் (31-வது நிமிடம்), தியஸ் பேக்கர் (36-வது நிமிடம்), ஜென்ஸ் டி வுஜிஸ்ட் (39-வது நிமிடம்), வான் டெர் வால்க் பெபிஜன் (49-வது நிமிடம்), ஜேன் லேண்ட் வான் (56-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து ‘இ’ பிரிவில் 3 வெற்றிகளுடன் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் கடந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்ற பிரான்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் டாம் கெய்லார்ட் (7-வது நிமிடம்), கேபின் லோராசுரி (32-வது நிமிடம்), ஜேம்ஸ் லிடியார்டு (38-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி ‘எஃப்’ பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை தோற்கடித்தது.