

புதுடெல்லி: உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று முன்தினம் இரவு முடிவடைந்தது. முதலில் நடைபெற்ற ரேபிட் வடிவிலான செஸ் போட்டியின் ஓபன் பிரிவில் World Blitz Chess Championshipநார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், மகளிர் பிரிவில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினாவும் சாம்பியன் பட்டம் வென்றனர். இந்தப் போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியும், மகளிர் பிரிவில் கோனேரு ஹம்பியும் வெண்கலம் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய உலக பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது ஓபன் பிரிவில் 19 சுற்றுகளும், மகளிர் பிரிவில் 15 சுற்றுகளும் கொண்டதாக அமைந்தது. 252 வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியின் அனைத்து சுற்றுக்கள் முடிவில் அரை இறுதிக்கு மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), அர்ஜுன் எர்கைசி (இந்தியா), பேபியானோ கருணா (அமெரிக்கா), நோடிர்பெக் அப்தசத்தோ ரோவ் (உஸ்பெகிஸ்தான்) ஆகியோர் தகுதி பெற்றனர்.
இதில் அர்ஜுன் எரிகைசியை அப்துசத்தோரோவ்வும், பேபியானோ கருணாவை கார்ல் சென்னும் தோற்கடித்தனர். இறுதிப் போட்டியில் கார்ல்சென் 2.5 -1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று பி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்தப் போட்டியின் அரை இறுதியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அர்ஜுன் எரிகைசிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
பிளிட்ஸ் போட்டியில் ஓபன் பிரிவில் 19 சுற்றுக்கள் முடிவில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியிருந்தார் எரிகைசி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக பிளிட்ஸ் போட்டியின் ஓபன் பிரிவில் பதக்கம் வென்ற 2-வது இந்திய ஆடவர் என்ற பெருமையை அர்ஜுன் எரிகைசி பெற்றார்.
உலக பிளிட்ஸ் போட்டியின் மகளிர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை பிபிசரா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதையடுத்து உலக பிளிட்ஸ் போட்டியில் வெண்கலம் கைப்பற்றிய அர்ஜுன் எரிகைசிக்கு பிரதமர் மோடி நேற்று பாராட்டு தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: செஸ் போட்டிகளில் இந்தியாவின் வெற்றி நடை தொடர்கிறது. இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியின் வெற்றிகள் நமது நாட்டு இளைஞர்களை மேலும் உத்வேகப்படுத்தும். அவருக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள். அவர் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.