

செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
கிராண்ட் செஸ் டூர் அட்டவணையின் அங்கமாக நடைபெறும் செயின்ட் லூயிஸ் செஸ் போட்டியில், ரேப்பிட் பிரிவின் முடிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா 12 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் பிரிவில் பிரக்ஞானந்தா 11.5 புள்ளிகளை குவித்து மொத்தம் 23.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார். செயின்ட் லூயிஸ் தொடரில் தமிழகத்தை சேர்ந்த 20 வயதான பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும். 18 ஆட்டங்கள் கொண்ட பிளிட்ஸ் பிரிவில் பிரக்ஞானந்தா ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வி அடைந்திருந்தார்.
உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவ் 22 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், அமெரிக்காவின் வெஸ்லி சோ 20 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர். தற்போதைய வெற்றியால் பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் டூர் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
இது இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள கிராண்ட் ஃபைனல் போட்டிக்கு அவர், தகுதி பெறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. எனினும் நாளை (9-ம் தேதி) நடைபெறும் கிளாசிக்கல் போட்டியில் பிரக்ஞானந்தா எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே அனைத்தும் அமையக்கூடும்.
தமிழக முதல்வர் பாராட்டு
செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர். பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், தனது எக்ஸ் வலைதள பதிவில், “அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், பிரக்ஞானந்தா தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடி சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையான ஆதரவையும், வழிகாட்டுதலையும் எஸ்டிஏடி வழங்கி வருகிறது. எலைட் திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் பிரக்ஞானந்தாவுக்கு எனது பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.