

கொல்கத்தா: இந்தியா - உருகுவே அணிகள் இடையிலான பிஃபா நட்புரீதியிலான கால்பந்து போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய கால்பந்து அணி கடந்த வாரம் பெங்களூருவில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள பனாமா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் டிரா செய்திருந்தது. இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் 5 முறை உலக சாம்பியனான பிரேசிலுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை உலக சாம்பியனான உருகுவே அணியுடன் இந்தியா மோதுகிறது. உருகுவே அணி தரவரிசையில் 20-வது இடத்திலும், இந்திய அணி 138-வது இடத்திலும் உள்ளன.
பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்த ரியான் வில்லியம்ஸ் மீது இந்திய அணி அதிக நம்பிக்கை வைத்துள்ளது. அவர், இந்திய அணியின் தாக்குதல் ஆயுதமாக உருவெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வில்லியம்ஸ், பந்தை வேகமாக எடுத்துச் சென்று, கோல் வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அவரது நகர்வுகளுடன், மன்வீர் சிங்கின் வேகமான முன்னேற்றமும், சஹல் அப்துல் சமத்தின் இணைந்து ஆடும் திறனும் கைகொடுத்ததால் பிரேசில் அணிக்கு எதிராக தொடக்க கட்டங்களில் இந்தியா சில தருணங்களில் நெருக்கடி கொடுக்க முடிந்தது. அதேபோல், லாலெங்மாவியா ரால்டே, அன்வர் அலி, சஹல் ஆகிய மூவரும் எதிரணியின் அழுத்தத்தை எதிர்கொண்டு பந்தை வெறுமனே வெளியேற்றாமல், பாஸ்கள் மூலம் ஆட்டத்தை நகர்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தினர்.
கோல் கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்து, வினிசியஸ் ஜூனியருக்கு எதிரான நேருக்கு நேர் வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், பின்னர் எளிதில் தவிர்க்கக்கூடிய இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
பிரேசிலுக்கு எதிராக இந்தியா கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், இலக்கை நோக்கி போதுமான ஷாட்களை அடிக்கத் தவறியது. உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த அம்சத்தில் இந்தியா முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
உருகுவே அணி புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. 2026 உலகக் கோப்பையில் அந்த அணி ஒரு வெற்றியை கூட பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து,
பயிற்சியாளர் மார்செலோ பியெல்சா பதவி விலகினார். இதைத் தொடர்ந்து முன்னாள் வீரரான டியாகோ ஃபோர்லான், புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் முதல் ஆட்டத்தில் ஜப்பானிடம் 1-3 என்ற கோல் கணக்கில் உருகுவே தோல்வியடைந்தது. ஆனால், நான்கு நாட்களுக்குப் பிறகு தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வலுவாக பதிலடி கொடுத்தது.
முக்கியமான நடுகள வீரரான பெட்ரிகோ வால்வெர்டே காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால், உருகுவேயின் மிட்ஃபீல்டு சற்று வலுவிழக்கலாம். டார்வின் நூனெஸ், தாக்குதல் ஆட்டத்தில் முக்கிய வீரராகத் திகழ்கிறார். டிஃபன்ஸ் பகுதியை ரொனால்ட் அராவுஹோ வழிநடத்துவார். அவருடன் டிஃபன்ஸில் லூகாஸ் டோரெய்ரா, டோரெய்ரா ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள்.