

புதுடெல்லி: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் இரு முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 7-ம் தேதி மோதுகிறது.
இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் முழுபலத்துடன் களமிறங்குகிறது. இதனால் இந்திய அணி டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி கூறியதாவது:
இந்திய அணி மிகவும் ஆபத்தான அணிகளில் ஒன்றாக இருக்கிறது. ஒரு நல்ல அணிக்கு என்ன தேவையோ அனைத்துமே இங்கு இருக்கிறது. டி20 போட்டிக்கான அனுபவம் மிக்க வீரர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள், நெருக்கடியான சூழ்நிலைகளில் விளையாடியுள்ளனர். எனக்குக் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால் பனிப் பொழிவுதான்.
போட்டியின் போது பனிப்பொழிவால் ஏற்படும் ஈரப்பதம் எனக்கு பிடிக்காது. பனிப்பொழிவு பல விஷயங்களை மாற்றிவிடும். நான் விளையாடிக்கொண்டிருந்த காலங்களில்கூட, பனிப்பொழிவு என்னை மிகவும் பயமுறுத்தியது. அது டாஸை மிகவும் முக்கியமானதாக மாற்றிவிடும்.
தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணியில் உள்ள எந்த வீரரும் காயமடையக் கூடாது. என்னென்ன பொறுப்புகள் கொடுக்கப்பட்டாலும், அதை வீரர்கள் அணிக்காக நிறைவேற்ற வேண்டும். இதில், நான் எதுவும் சொல்லி அது தவறாகி விடக்கூடாது. ஆனால், இந்திய அணி மிகவும் ஆபத்தானது.
2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஏன் விளையாடக்கூடாது. என்னைப் பொறுத்தவரை வயது என்பது தகுதி கிடையாது. உடல்நலம், செயல்திறன் மட்டுமே முக்கியமான தகுதி. இந்த விஷயத்தில் யாருமே எதுவும் சொல்லக்கூடாது என்றே நான் எப்போதும் நினைப்பேன்.
ரோஹித் சர்மா, விராட் கோலி அல்லது அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரவிருக்கும் மற்ற வீரர்களாக இருக்கட்டும் அவர்கள் அடுத்த உலகக் கோப்பையில் விளையாட முடியுமா முடியாதா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது, அதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், நாட்டிற்காகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் அவர்களிடம் இருந்தால், ஏன் விளையாடக்கூடாது?
அனுபவம் வாய்ந்த வீரர்கள் நமக்கு கிடைக்க மாட்டார்கள். ஒருவர் சச்சின் டெண்டுல்கராக இல்லாவிட்டால், 20 வயதில் அனுபவம் மிக்க வீரராக இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்க முடியாது. 16 அல்லது 17 வயதில் விளையாட தொடங்கினால் மட்டுமே 20 வயதில் அனுபவம் வந்திருக்கும். 20 அல்லது 25 போட்டிகள் விளையாடியவர்கள் எல்லாம் அனுபவசாலிகள் எனக் கூற முடியாது.
80 அல்லது 85 போட்டிகள் விளையாடினால்தான் அனுபவம் வரும். அப்போதுதான் நமக்கு நமது உணர்வுகளை, அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என்று தெரியும். அனுபவமும் இளம் வீரர்களும் கலந்த கலவையாக அணி இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்.
அணியில் அனைவரையும் சமமாக நடத்துங்கள். சிறப்பாகச் செயல்படுபவர்கள் அணியில் இருப்பார்கள். சிறப்பாகச் செயல்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஒருவர் உடற்தகுதியுடன் இல்லையெனில் அவரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீக்கலாம் அல்லது சரியாக விளையாடவிட்டால் நீக்கலாம். அதனால், ஒரே தகுதிதான். நன்றாக விளையாடி உடல் நலத்துடன் இருந்தால் தொடர்ந்து விளையாடலாம். இவ்வாறு தோனி கூறினார்.