

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷன்.
அகமதாபாத்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இரு அணிகளுமே லீக் சுற்றில் தங்களது ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. நடப்பு சாம்பியனான இந்திய அணியானது லீக் சுற்றில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியானது கனடா, ஐக்கிய அரபு அமீரகம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றிருந்தது.
லீக் சுற்றில் இந்திய அணி வெற்றிகளை குவித்த போதிலும் முதல் 4 இடங்களில் களமிறங்கக்கூடிய பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷனை தவிர மற்ற வீரர்களிடம் அனல் பறக்கும் அளவிலான மட்டைவீச்சு வெளிப்படவில்லை. இஷான் கிஷன் நடப்பு தொடரில் 2 அரை சதங்கள் விளாசி உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 202 ஆக உள்ளது.
அதேவேளையில் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 3 ஆட்டங்களில் களமிறங்கிய நிலையில் அனைத்திலும் டக் அவுட் ஆனார். இது ஒருபுறம் இருக்க கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் வழக்கத்துக்கு மாறாக அதிரடி பாணியில் இருந்து விலகி நிலைத்து நின்று விளையாடி பந்துகளுக்கு நிகராகவே ரன்கள் சேர்த்து வருகின்றனர்.
திலக் வர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 பந்துகளில் 25 ரன்களும், நமீபியாவுக்கு எதிராக 21 பந்துகளில் 25 ரன்களும், நெதர்லாந்துக்கு எதிராக 27 பந்துகளில் 31 ரன்களும் சேர்த்தார். அவரது ஸ்டிரைக் ரேட் நடப்பு தொடரில் 120 ஆக இருக்கிறது. இது அவரது ஒட்டுமொத்த சராசரியான 141-ஐ விட குறைவாகவே உள்ளது.
சூர்யகுமார் யாதவ் அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்து ழ்களில் 84 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருந்தார். ஆனால் அதன் பின்னர் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் சூர்யகுமார் யாதவிடம் இருந்து பெரிய அளவிலான மட்டைவீச்சு வெளிப்படவில்லை. நடப்பு தொடரில் அவரது ஸ்டிரைக் ரேட் 136+ ஆக இருக்கிறது. ஆனால் அவரது ஒட்டுமொத்த டி 20 போட்டிகளிளின் ஸ்டிரைக் ரேட் 163+ ஆகும்.
பும்ரா - வருண் கூட்டணி: ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தபடி இவர்கள் செயல்படுவதால் பெரிய அளவில் விமர்சனங்கள் எழவில்லை. எனினும் ஆடுகளம் மந்தமாக இருப்பதால் இவர்களால் நடு ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் வேட்டை நிகழ்த்த முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் இறுதிப்பகுதியில் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு ரன்கள் குவிப்பது இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது.
பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். சக்ரவர்த்தி நடப்பு தொடரில் 8 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஓவருக்கு சராசரியாக 5.16 ரன்களை மட்டுமே வழங்கி உள்ளார். அதேவேளையில் பும்ரா ஓவருக்கு 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் குயிண்டன் டி காக், எய்டன் மார்க்ரம், டெவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், டேவிட் மில்லர், மார்கோ யான்சன் ஆகியோர் தங்களது அதிரடியால் பலம் சேர்க்கக்கூடியவர்கள். பந்துவீச்சில் சுழலில் ஜார்ஜ் லின்டே, கேசவ் மகாராஜ் ஆகியோருடன் எய்டன் மார்க்ரமும் சிறப்பாக செயல்படக்கூடியவர். வேகப்பந்து வீச்சில் காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, மார்கோ யான்சன் தங்களது சீரான வேகங்களால் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
இந்திய அணியில் கடந்த ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த குல்தீப் யாதவ், அக்சர் படேல் களமிறங்கக்கூடும். இதனால் அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படக்கூடும். இதேபோன்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த மார்கோ யான்சன், லுங்கி நிகிடி, கேசவ் மகாராஜ் ஆகியோர் களமிறங்கக்கூடும்.
அபிஷேக் சர்மா கடந்த இரு ஆட்டங்களிலும் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்து இருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம், ஜார்ஜ் லின்டே, கேசவ் மகாராஜ் ஆகியோர் பவர்பிளேவில் சவால் அளிக்கக்கூடும்.
‘அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து கவலையில்லை’
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “அபிஷேக்கின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களை நினைத்து எனக்கு கவலையாக உள்ளது. அவர்கள் ஏன் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டும்? கடந்த ஆண்டு அதிரடியாக விளையாடி அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் அபிஷேக் சர்மா பாதுகாத்தார். ஓர் அணியாக அவரைப் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை.
உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா அவரது ரன் கணக்கை இன்னும் தொடங்கவில்லை. அவர் ரன் கணக்கைத் தொடங்கி விட்டால், என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அவர் அதிரடியாக விளையாடினால், எப்படி இருக்கும் என்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.
அணி நிர்வாகம் அபிஷேக்கிடமிருந்து ஒரு குறிப்பிட்ட வகையான ஆட்டத்தை எதிர்பார்க்கிறது. அவர், அந்த வகையில் விளையாட முயற்சிக்கிறார். அவர், தனது அடையாளத்தை இழக்க நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. அதிரடியாக விளையாடும் முயற்சியில் அவர் ஆட்டமிழந்தால், ரன்கள் குவிக்க அடுத்தடுத்த இடங்களில் நாங்கள் இருக்கிறோம். அவரை பாதுகாப்போம்” என்றார்.