

புதுடெல்லி: அனைவருக்கும் ஏஐ பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் புதுடெல்லி ஏஐ பிரகடனத்தில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட 88 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘இந்தியா-ஏஐ உச்சி மாநாடு 2026’ கடந்த 16-ம் தேதி தொடங்கியது. கடந்த 6நாட்களாக நடைபெற்ற இந்த மாநாடு நேற்று நிறைவடைந்தது. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
உலகளாவிய கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைத்த இந்த மாநாடு, சர்வதேச ஏஐ நிர்வாகம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை வடிவமைப்பதில் இந்தியாவின் முக்கியப் பங்கை உறுதிப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து பல முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. இந்த மாநாட்டின் இறுதி நாளில், ‘புது டெல்லி ஏஐ பிரகடனம்’ வெளியிடப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 88 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “அனைவரது நலன் மற்றும் அனைவரது மகிழ்ச்சி அவசியம் என்ற உயர்ந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பிரகடனம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவின் பயன்கள் அனைவருக்கும் சமமாகப் பகிரப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக தேசிய இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளித்தல், ஏஐ தொழில்நுட்பத்தை அனைவரும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுதல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு புது டெல்லி பிரகடனம் அழைப்பு விடுத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ வளங்களை ஜனநாயகப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலம், பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏஐ, அறிவியலில் ஏஐ, சமூக அதிகாரமளித்தல் மற்றும் மனிதவள மேம்பாடு உட்பட 7 துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என இந்த பிரகடனம் வலியுறுத்துகிறது.
இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, “இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் ரூ.22 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன” என்றார்.