

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் போட்டியில், நமீபியா அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியா, தனது குரூப் ஏ பிரிவில் இரண்டாவது வெற்றியைப் பெற்று வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.
டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணிக்குத் தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியான தொடக்கம் கொடுத்தார். வெறும் 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் குவித்து நமீபிய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.
மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஹர்திக் பாண்டியா தனது அதிரடியைத் தொடர்ந்தார். அவர் 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. நமீபியா அணி தரப்பில் கேப்டன் எராஸ்மஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணிக்கு இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே அழுத்தம் கொடுத்தனர். வருண் சக்கரவர்த்தி தனது சுழல் பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நமீபியாவை திணற வைத்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.
நமீபியா அணி 18.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தனது 10-வது தொடர் வெற்றியைப் பதிவு செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக, பிப்ரவரி 15-ம் தேதி கொழும்புவில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி ஆட உள்ளது.