

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுகிறது.
டெஸ்ட் போட்டி ஜூன் 6 முதல் 10-ம் தேதி வரை நியூ சண்டிகரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. அதேவேளையில் இந்த போட்டி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு அங்கமாக இருக்காது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஒருநாள் போட்டித் தொடர் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாக உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 14-ம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது.
2-வது போட்டி 17-ம் தேதி லக்னோவிலும் 3-வது மற்றும் கடைசி போட்டி 20-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.