

புதுடெல்லி: இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்திய அணி பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி என வலுவான வரிசையைக் கொண்டுள்ளது.
அதேபோல் பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய கூட்டணி ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசையை அசைத்துப் பார்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
அதேநேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி இப்ராஹிம் ஸத்ரன் தலைமையில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் ஆப்கானிஸ்தான் வீரர் தர்விஷ் ரசூலி, நூர் உல் ரஹ்மான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகியோர் எதிரணி பந்துவீச்சாளர்களை விளாசக் காத்திருக்கின்றனர்.
பந்துவீச்சில் ரஷித் கான், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் அடங்கிய சுழற்பந்துவீச்சுக் கூட்டணி இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சோதனை அளிக்கக்கூடும். அதேபோல் வேகப்பந்து வீச்சிலும் பஸல்ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோரும் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டக் காத்திருக்கின்றனர்.
அணி விவரம்:
இந்தியா: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி,
ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, யாஷ் தாக்குர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.
ஆப்கானிஸ்தான்: இப்ராஹிம் ஸத்ரன் (கேப்டன்), தார்விஷ் ரசூலி, நூர் உல் ரஹ்மான், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), செடிக்குல்லா அடல், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ரஷித் கான், முகமது நபி, குல்பதீன் நயீப், நாங்கெலியா கரோட்டே, அப்துல்லா அகமதுஸாய், பஸல்ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது.