

தரம்சாலா: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரே ஒரு போட்டி கொண்ட தொடரை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட உள்ளன.
இதன் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் சீனியர் நட்சத்திரமான விராட் கோலி, ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. அதேவேளையில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா முழு உடற்தகுதியுடன் களமிறங்குகிறார்.
பாண்டியா இல்லாததால் நித்திஷ் குமார் ரெட்டி மீது அனைவரது பார்வையும் திரும்பக்கூடும். வரும் 2027-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி தற்போதே திட்டமிடத் தொடங்கி உள்ளது. உலகக் கோப்பை தொடரில் 39 வயதாகும் ரோஹித் சர்மா விளையாடுவாரா? என்பதில் இன்னும் சந்தேகம் நீடித்து வருகிறது.
இந்த முக்கியத் தொடருக்கு முன்னதாக இந்திய அணி சுமார் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் இந்திய அணி பல்வேறு அணி சேர்க்கைகளை சோதித்துப் பார்க்கக்கூடும். அந்த வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரும் கவனம் பெற்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்க ஷுப்மன் கில்லின் கேப்டன்சியில் இந்திய அணி 3 தொடர்களில் 2 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் கேப்டனாக தனது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் ஷுப்மன் கில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்கக்கூடும். 3-வது இடத்துக்கு இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரிடையே போட்டி நிலவக்கூடும். 4-வது இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கக்கூடும். இவர்களை தொடர்ந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல், ஆல்ரவுண்டராக நித்திஷ் குமார் ரெட்டி இடம்பெறுவார்கள்.
சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தரும், பிரதான சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவும் களமிறங்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெறுவார்கள்.
3-வது வேகப்பந்து வீச்சாளராக பிரின்ஸ் யாதவ் அல்லது குர்னூர் பிரார் களமிறங்கக்கூடும். இந்தத் தொடரில் முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையில் களமிறங்குகிறது.
டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரஷித் கான், முகமது நபி ஆகியோர் களமிறங்குவது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சலீம் மீது எதிர்பார்ப்பு உள்ளது.