

புலவாயோ: யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வேயுடன் மோதியது. புலவாயோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. துணை கேப்டனான விஹான் மல்கோத்ரா 107 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் விளாசி அசத்தினார்.
வைபவ் சூர்யவன்ஷி 30 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிக்யான் குண்டு 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61ரன்களும் சேர்த்தனர்.
353 ரன்கள் இலக்குடன் பேட் செய் ஜிம்பாப்வே அணி 37.4 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் உத்தவ் மோகன், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
204 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் குரூப் 2-ல் முதலிடத்தில் உள்ளது.