

புதுடெல்லி: 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முழு பலத்துடன் தயாராகி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. போட்டியை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கும் வாலிபால் போட்டிக்கும் இடையே பல தொடர்புகள் உள்ளன. வாலிபால் என்பது ஒரு சாதாரண போட்டி அல்ல. அது சமமாக அணியினர் அனைவரும் இணைந்து விளையாடக் கூடியது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான 20 சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து, ஹாக்கி உலகக் கோப்பை, பல்வேறு சர்வதேச செஸ் போட்டிகள் உள்ளிட்டவை இந்தியாவில் நடத்தப்பட்டன. 2030ல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடைபெறும். மேலும், 2036-ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த முழு பலத்துடன் இந்தியா தயாராகி வருகிறது.
வாராணசியில் தேசிய வாலிபால் போட்டியை நடத்துவது நகரத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. வாராணசியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் வாராணசிக்கு வர வேண்டும் என்று பழமொழி உண்டு. இப்பொழுது நீங்கள் அனைவரும் வாராணசிக்கு வந்து இருப்பதால் அதன் கலாசாரத்தை புரிந்து கொள்வீர்கள். 2014ம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளுக்காக பல்வேறு உள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.