

புதுடெல்லி: இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் சகநாட்டைச் சேர்ந்த ஆயுஷ் ஷெட்டியை எதிர்த்து விளையாடினார்.
36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக் ஷயா சென் 21- 12, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். லக்ஷயா சென் 2-வது சுற்றில் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவுடன் மோதுகிறார்.
கனடாவின் பிரையன் யங் 21- 19, 21- 11 என்ற நேர் செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த சீன தைபேவின் சவ் டியென் செனை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் சீன தைபேவின் ஷி யு ஜென் 21- 17, 21- 19 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரரான பிரான்சின் அலெக்ஸ் லானியரை தோற்கடித்தார்.
7-ம் நிலை வீரரான ஜப்பானின் கோடை நரோகா, சக நாட்டைச் சேர்ந்த கென்டா நிஷிமோடோவுடன் மோதினார். இதில் நரோகா 6- 21, 5- 7 என்ற செட் கணக்கில் பின் தங்கிய நிலையில் இருந்த போது காயம் காரணமாக வெளியேறினார். இதனால் நிஷிமோடோ 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21- 15, 21- 11 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் ஓர்னிச்சா ஜோங்சதாபோர்ன்பர்ன், சுகித்தா சுவாச்சை ஜோடியை தோற்கடித்தது. இந்த ஆட்டம் 42 நிமிடங்களில் முடிவடைந்தது.
ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி தங்களது அடுத்த சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சீனாவின் லி யி ஜிங், லுவோ யு மின் ஜோடியை எதிர்கொள்கிறது.
ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன், எம்.ஆர்.அர்ஜூன் ஜோடி 21- 15, 21- 18 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஓங் இயூ சின், தியோ ஈ யி ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. இந்திய ஜோடி அடுத்த சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சீனாவின் லியாங் வெய் கெங், வாங் ஷாங் ஜோடியுடன் மோதுகிறது.
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஷ்ருதி மிஸ்ரா, ப்ரியா கொன்ஜெங்பாம் ஜோடி 11- 21, 22- 20, 22- 24 என்ற செட் கணக்கில் போராடி ஹாங் காங்கின் லுய் லோக் லோக், சங் ஹியு யான் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்றது.
முன்னாள் உலக சாம்பியனான பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரனாய் ஆகியோர் மோதும் ஆட்டங்கள் நாளை (14ம் தேதி) நடைபெறுகின்றன. ஆடவர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சிராக் ஷெட்டி, சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி முதல் சுற்றில் அமெரிக்காவின் சென் ஹி, பிரேஸ்லி ஜோடியுடன் மோத இருந்தது.
ஆனால் அமெரிக்க ஜோடி கடைசி நேரத்தில் தொடரில் இருந்து விலகியது. இதனால் சிராக் ஷெட்டி, சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.