

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள், ஜன.17-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்குகிறார்.
கட்சியினர் அனைவரும், தங்கள் பகுதிகளில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே எம்ஜிஆர் படங்களை வைத்து மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.