

ககமிகஹாரா: ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி நேற்று மலேசியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இதன் மூலம் வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றது.
நேற்று முன்தினம் இந்திய மகளிர் ஹாக்கி அணி இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி 44 வருடங்களுக்கு பிறகு தங்கப் பதக்கம் வென்றதுடன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றிருந்தது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் ஹாக்கியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
இந்திய அணி தரப்பில் ஹர்மன்பீரித் சிங் 2 கோல்களும் (11, 57-வது நிமிடங்கள்) ஜுக்ராஜ் சிங் (23-வது நிமிடம்), ஹர்திக் சிங் (42-வது நிமிடம்), ஷில்லானந்த் லக்ரா (54-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். மலேசியா அணி சார்பில் 14-வது நிமிடத்தில் ஷெல்லோ சில்வேரியஸ் கோல் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் ஹாக்கியில் தொடர்ந்து இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற 2-வது அணி என்ற பெருமையை பெற்றது இந்திய ஆடவர் அணி. இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி தொடர்சியாக 2 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. மேலும் 2 ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்ப்ரீத் சிங் பெற்றார்.
5-வது முறையாக தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டி ஆடவர் ஹாக்கியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இது 5-வது முறையாகும். இதற்கு முன்னர் 1966, 1998, 2014 மற்றும் 2023-ம் ஆண்டுகளிலும் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது.
ஆசிய விளையாட்டு இன்றுடன் நிறைவு
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. 46 நாடுகளை சேர்ந்த 10,787 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த விளையாட்டு திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இதில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என 85 பதக்கங்கள்
வென்று 4-வது இடத்தில் உள்ளது. நிறைவு நாளான இன்று இந்தியாவுக்கு எந்தவித போட்டிகளும் இல்லை. மாறாக 5-வது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தான் (21 தங்கம், 25 வெள்ளி, 24 வெண்கலம்) இன்று குதிரையேற்றத்தில் பங்கேற்கிறது. இதனால் பதக்க பட்டியலில் சிறிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது.
மல்யுத்தத்தில் அமன் ஷெராவத்துக்கு தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டியின் மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத் 11-7 என்ற கணக்கில் வடகொரியாவின் நடப்பு உலக சாம்பியனான சோங் சாங் ஹானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இது ஆசிய விளையாட்டு போட்டியின் பேண்டம்வெயிட் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கமாகும்.
மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்டிம் பங்ஹால் 1-9 என்ற கணக்கில் ஜப்பானின் மியோகாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 97 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் தீபக் பூனியா 2-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் கன்குயாங்கை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.