

நவ்ப்ரீத் சிங்
புதுடெல்லி: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக துருக்கியில் பதுங்கி இருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நவ்ப்ரீத் சிங், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளான்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நவ்ப்ரீத் சிங் ‘நவாப் விர்க்’ என்ற போலி பெயரில் துருக்கி குடியுரிமையைப் பெற்றிருந்தான்.
இந்த போலி அடையாளத்தின் பின்னணியில் இருந்து, ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் மற்றும் மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை இந்தியாவுக்குள் கடத்தி வந்தான்.
இந்திய உளவுத்துறை மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் பல நாடுகளில் அவனது நகர்வுகளை கண்காணித்து, போலி ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமை தடைகளை உடைத்து அவனது உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்தின. இறுதியில் அவனை கண்டுபிடித்து, இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றின.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்குகளில் அவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இது சர்வதேச போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல். 2029 டிசம்பருக்குள் இந்தியாவில் செயல்படும் அனைத்து போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் முழுமையாக ஒழிக்கும் இலக்கில் மத்திய அரசு உறுதியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.