மார்கோ வேகத்தில் 201 ரன்களில் சுருண்டது இந்திய அணி - 314 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!

மார்கோ வேகத்தில்  201 ரன்களில் சுருண்டது இந்திய அணி - 314 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!
Updated on
3 min read

குவாஹாட்டி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, மார்கோ யான்சனின் அபார பந்து வீச்சால் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ- ஆன் ஆனது. எனினும், பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

குவாஹாட்டி பர்சபாரா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 489 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 7-வது வீரராக களமிறங்கிய செனுரன் முத்துசாமி 109 ரன்களும், 9-வது வீரராக களமிறங்கிய மார்கோ யான்சன் 93 ரன்களும் விளாசினர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 2, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது மார்கோ யான்சனின் ஷார்ட் பால் வியூகத்திலும், சைமன் ஹார்மரிலும் சுழலிலும் சிக்கி 83.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை தவிர மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் யாரிடம் இருந்து சிறந்த பங்களிப்பு வெளிப்படவில்லை.

முதல் விக்கெட்டுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஜோடி 21.3 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 63 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மஹாராஜ் பந்தில் சிலிப் திசையில் நின்ற எய்டன் மார்க்ரமிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

தனது 13-வது அரை சதத்தை கடந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 97 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் சைமன் ஹார்மர் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வேகம் குறைத்து வீசிய பந்தை பேக்வேர்டு பாயின்ட் திசையில் அடித்த போது யார்கோ யான்சன் டைவ் அடித்து மிக தாழ்வாக வந்த பந்தை அற்புதமாக கேட்ச் செய்தார்.

அங்கிருந்து இந்திய அணியின் சரிவு தொடங்கியது. சாய் சுதர்சன் 40 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் சைமன் ஹார்மர் வீசிய பந்தை லெக் திசையில் விளாச முயன்றார். ஆனால் அதை மிட்விக்கெட் திசையில் பாய்ந்து அபாரமாக கேட்ச் செய்தார் ரியான் ரிக்கெல்டன். இதையடுத்து மார்கோ யான்சன் ஆடுகளத்தின் தன்மையை சரியாக பயன்படுத்தி ஷாட்-பால்கள் வீசினார்.

இதில் முதலில் துருவ் ஜூரெல் சிக்கினார். 11 பந்துகளை சந்தித்த துருவ் ஜூரெல் ரன் ஏதும் எடுக்காமல் மார்கோ யான்சன் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் அடித்த போது கேசவ் மஹாராஜிடம் கேட்ச் ஆனது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரிஷப் பந்த் 7 ரன்கள் எடுத்த நிலையில் மார்கோ யான்சன் வீசிய பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து பெரிய ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் உரசி விக்கெட் கீப்பர் கேட்ச் ஆனது.

இதன் பின்னர் நிதிஷ் குமார் ரெட்டி 10 ரன்கள் எடுத்த நிலையில் மார்கோ யான்சன் வீசிய ஷாட் பாலை தடுமாறியபடி எதிர்கொள்ள பந்து கையுறையில் பட்டு 2-வது சிலிப் திசையை நோக்கி பாய்ந்தது. அப்போது அங்கிருந்த எய்டன் மார்க்ரம் பாய்ந்து ஒற்றைகையால் கேட்ச் செய்து மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து மார்கோ யான்சன் வீசிய பவுன்சர் ரவீந்திர ஜடேஜாவின் (6) தோள்பட்டையில் பட்டு அதன் பின்னர் மட்டையின் பின்புறத்தில் உரசியபடி 2-வது சிலிப் திசையில் நின்ற மார்க்ரமிடம் கேட்ச் ஆனது. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 7 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்கள் என்றிருந்தது.

65 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி 122 ரன்களை எட்டுவதற்குள் மேற்கொண்டு 6 விக்கெட்களை கொத்தாக தாரைவார்த்தது. 8-வது விக்கெட்டுக்கு இணைந்த வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. 72 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை சைன் ஹார்மர் பிரித்தார்.

வாஷிங்டன் சுந்தர் 92 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் சைமன் ஹார்மர் பந்தில் சிலிப் திசையில் நின்ற மார்க்ரமிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 80 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது புதிய பந்தை கையில் எடுக்க எஞ்சிய 2 விக்கெட்களையும் இந்திய அணி விரைவாக பறிகொடுத்தது.

தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய குல்தீப் யாதவ் 134 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் மார்கோ யான்சன் பந்தில் சிலிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வீரராக ஜஸ்பிரீத் பும்ரா 5 ரன்களில் மார்கோ யான்சன் பந்தில் நடையை கட்டினார். முகமது சிராஜ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ யான்சன் 19.5 ஓவர்களை வீசி 5 மெய்டன்களுடன் 48 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். சைமன் ஹார்மர் 3, கேசவ் மஹாராஜ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர்த்து மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழந்த நிலையில் 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய குல்தீப் யாதவ் 134 பந்துகளை சந்தித்து இன்னிங்ஸை சிறப்பாக கட்டமைக்க முயற்சித்தார்.

பந்துவீச்சுக்கு ஆடுகளத்தில் இருந்து பெரிய உதவி கிடைக்காத நிலையில் இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடி விக்கெட்களை தாரை வார்த்தனர். குல்தீப் யாதவின் தடுப்பாட்ட யூக்தி, அவர்களுக்கு பாடம் கற்பிப்பது போன்று இருந்தது.

201 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனநிலையில், இந்திய அணிக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யத் தொடங்கியது. அந்த அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்தது. ரியான் ரிக்கெல்டன் 13, எய்டன் மார்க்ரம் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கைவசம் 10 விக்கெட்கள் இருக்க 314 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

மார்கோ வேகத்தில்  201 ரன்களில் சுருண்டது இந்திய அணி - 314 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!
‘தர்மேந்திரா... இந்திய சினிமாவில் ஒரு சகாப்தம்!’ - பிரதமர் மோடி புகழஞ்சலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in