

பாங்காங்: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ரைசிங் ஸ்டார்ஸ் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று நடப்பு சாம்பியனான இந்தியா ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியை எதிர்த்து விளையாடியது.
முதலில் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தேஜல் ஹசாப்னிஸ் 34 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், கேப்டன் ராதா யாதவ் 30 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்களும் விளாசினர்.
வங்கதேச ‘ஏ’ அணி தரப்பில் ஃபஹிமா கதுன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 135 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச ‘ஏ’ அணி 19.1 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷாமினா சுல்தானா 20, சர்மின் சுல்தானா 18, ஃபஹிமா கதுன் 14 ரன்கள் சேர்த்தனர்.
இந்தியா ‘ஏ’ அணி தரப்பில் பிரேமா ராவத் 3 விக்கெட்களை வீழ்த்தினார். சோனியா மெந்தியா, தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ அணி 2-வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.ரைசிங் ஸ்டார்ஸ் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இந்தியா ‘ஏ’ அணியின் தேஜல் ஹசாப்னிஸ்.