

தோஹா: வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஏ அணி தோல்வி அடைந்தது. இதில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.
கத்தாரில் உள்ள தோகா நகரில் வரும் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா ‘ஏ’ உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் விளையாடினர். அரையிறுதிக்கு இந்தியா-ஏ மற்றும் வங்கதேசம்-ஏ, பாகிஸ்தான்-ஏ ஆற்றும் இலங்கை-ஏ அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன.
வெள்ளிக்கிழமை தோஹாவில் நடைபெற்ற இந்தியா-ஏ மற்றும் வங்கதேசம்-ஏ அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசம்-ஏ அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா-ஏ விரட்டியது. வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் 38 ரன்களும், பிரயான்ஷ் ஆர்யா 23 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர். நமன் திர் 7 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஜிதேஷ் சர்மா 33 ரன்கள் எடுத்தார்.
கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. இருப்பினும் இந்திய அணி 44 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரமன்தீப் 17, அசுதோஷ் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நேஹல் வதேரா 32 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரு அணிகளும் 194 ரன்கள் எடுத்த காரணத்தால் ஆட்டம் சமன் ஆனது. வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஜிதேஷ் மற்றும் அசுதோஷ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். சூப்பர் ஓவரில் 2 விக்கெட் இழந்தால் ஆல் அவுட் என்பதால், வங்கதேசம்-ஏ அணி 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடியது. முதல் பந்தில் வங்கதேச வீரரின் விக்கெட்டை வீழ்த்திய இந்தியாவின் சுயாஷ், அடுத்த பந்தை வொய்டாக வீச வங்கதேசம் வெற்றி பெற்றது.