

மார்தா கோஸ்ட்யுக்
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 4 முறை சாம்பியனும் 3-ம் நிலை வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், 15-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்தா கோஸ்ட்யுக்குடன் மோதினார்.
இதில் மார்தா கோஸ்ட்யுக் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இகா ஸ்வியாடெக்கிற்கு நேற்று 25-வது பிறந்த நாளாகும். இதனால் அவரது தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
7-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்கையும், 18-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டியா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 148-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சியு வாங்கையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தனர்.