“பேசாமல் வீட்டுக்குப் போய்விடுங்கள்” - பென் ஸ்டோக்ஸ் படை மீது இயன் போத்தம் பாய்ச்சல்!

“பேசாமல் வீட்டுக்குப் போய்விடுங்கள்” - பென் ஸ்டோக்ஸ் படை மீது இயன் போத்தம் பாய்ச்சல்!
Updated on
1 min read

பாஸ்பால் என்று கூறி எத்தனை முறை தோற்ற போதிலும் ‘நாங்கள் மாற மாட்டோம்’ என்று கூறுவதைக் கேட்க மிகவும் எரிச்சலாக உள்ளது, இப்படித்தான் ஆடுவீர்கள் என்றால் பேசாமல் வீடு போய்ச்சேருங்கள் என்று இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் பென் ஸ்டோக்ஸ் தலைமை இங்கிலாந்தை சாடியுள்ளார்.

“பெர்த் தோல்வி பயங்கரமானது, அதை வர்ணிக்க இதை விட்டால் வேறு வார்த்தை இல்லை. இங்கிலாந்து மீண்டெழ வேண்டும், அதுவும் விரைவில் மீண்டெழ வேண்டும். ’நாங்கள் இப்படித்தான் ஆடுவோம்’ என்ற கூற்றைக் கேட்கவே எனக்கு எரிச்சலாக உள்ளது.

இன்னொரு முறை ‘அப்படித்தான் விளையாடுவோம்’ என்று கூறினால் கையில் இருப்பதைக் கொண்டு டெலிவிஷன் மேல் வீசி எறிவேன். அப்படித்தான் விளையாடுவேன் என்றால் பேசாமல் வீட்டுக்குப் போய்விடுங்கள். இப்போதே கிளம்புங்கள். ஏனெனில் இன்னொரு 5-0 ஒயிட் வாஷ் தோல்வியைப் பார்க்க விரும்பவில்லை.

நான் இப்படிச் சொல்வதனால் என்னை அவர்களுக்குப் பிடிக்காமல் போகும். அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் இந்த வார்த்தைகள் அவர்கள் காதுகளைச் சுற்றி ஒலிக்க வேண்டும்.

ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் என்ன செய்தார்கள் என்பதை மக்கள் நினைவில் கொண்டுள்ளார்கள். பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் இருவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். ஜோ ரூட் 39 சதங்கள் அடித்துள்ளார், இருவரும் ஆஸ்திரேலியாவில் சிறப்பாகச் செயல்பட முனைப்புடன் உள்ளனர்.

அதைச் செய்ய வேண்டும் எனில் வெற்றி பெறுவதன் மூலம்தான் செய்ய முடியும். சும்மா பாஸ்பால், அதிரடி ஆக்ரோஷம் என்று கூறிக்கொண்டு தோல்வியடைந்து கொண்டிருந்தால் எப்படிச் செய்ய முடியும்?

இவர்கள் இருவரும்தான் அங்கு நிரூபிக்க வேண்டும், ஏனெனில் மற்ற வீரர்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்கும். ஒன்றை மட்டும் அவர்களுக்குக் கூறுகிறேன், ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை வெல்வது மிகப்பெரிய மரியாதையைப் பெற்றுத்தரும்.

ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணில் வீழ்த்துவதுதான் ஒரு அணியின் நம்பிக்கைக்கான அளவுகோல். இதுதான் இங்கிலாந்து அணியைச் செலுத்த வேண்டிய தூண்டுகோலுமாகும்.” என்று கூறினார் இயன் போத்தம்.

“பேசாமல் வீட்டுக்குப் போய்விடுங்கள்” - பென் ஸ்டோக்ஸ் படை மீது இயன் போத்தம் பாய்ச்சல்!
“கம்பீர் உணர்ச்சிவசப்படுபவர்... பயிற்சியாளராக இருப்பது நல்லதல்ல” - ஏ.பி.டிவில்லியர்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in