

கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் கடந்த 12 மாதங்களில் 2-வது ஒயிட்வாஷை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சந்தித்ததும் அதற்கு கம்பீர் அளித்த விளக்கங்களும் கடும் சர்ச்சைகளைக் கிளப்பி வரும் நிலையில் 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் கம்பீர் குறித்த தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியதாவது: “இந்திய அணியின் பக்கம் பேச வேண்டுமென்றால், நிச்சயம் இந்தத் தோல்வி ஒரு தர்மசங்கடம் தான். தோல்வி கடினமானதுதான். தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை கவுதம் கம்பீர் எப்படிப்பட்டவர் என்பதை நான் அறியேன். அவர் ஒரு உணர்ச்சிவயப்படும் வீரர் என்பதை அறிவேன். இத்தகைய உணர்ச்சிவய நபர் ஓய்வறையில், அதுவும் பயிற்சியாளராக இருப்பது நல்ல விஷயமல்ல.
இப்படிக் கூறும் அதே வேளையில் திரைக்குப் பின்னால் அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று சொல்வதாக ஆகாது. சரி தவறு என்பது கிடையாது. முன்னாள் வீரருடன் சில வீரர்கள் சவுகரியமாக உணர்வார்கள். சில வீரர்கள் இந்திய அணிக்கு ஆடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். கம்பீருக்கு பயிற்சியாளராக அனுபவம் உள்ளது.
கம்பீர் குறித்த கேள்வி கடினமானது, தென் ஆப்பிரிக்கா அணியையே எடுத்துக் கொள்ளுங்கள் இப்போதைய பயிற்சியாளர் சுக்ரியுடன் நான் பணியாற்றியதில்லை, கவுதம் கம்பீர், ரியான் டென் டஸ்சேட், மோர்னி மோர்கெல் ஆகியோருடன் இந்திய ஓய்வறையில் நான் இருந்ததில்லை.
வெளியில் பார்க்க இது ஒரு வலுவான கூட்டணி போல் தெரிகிறது. ஆனால் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை யார் அறிவார்கள்? நான் சொல்ல வருவதெல்லாம் ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சியாளர் என்பவர் ஒவ்வொரு விதமாகவே தெரிவார்.
முன்னாள் வீரர் கேரி கர்ஸ்டன் தலைமையின் கீழ் ஆட எனக்கு மிகவும் பிடிக்கும். அவரும் கம்பீர் போலத்தான். முன்னாள் வீரர்களின் அனுபவம் நமக்கு உதவும் என்று சில வீரர்கள் சவுகரியமாக உணர்வார்கள். அவர்களுக்கு அது உத்வேகமாகக் கூட இருக்கும். ஆனால் மற்ற சிலருக்கு உத்வேகமாக இருக்காது. எப்படியிருந்தாலும் உணர்ச்சிவயப்படுபவர் பயிற்சியாளராக இருப்பது நல்லதல்ல” இவ்வாறு ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறினார்.