“கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு கோருகிறேன்” - யுவராஜ் சிங் வெளிப்படை

“கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு கோருகிறேன்” - யுவராஜ் சிங் வெளிப்படை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தனது தந்தை யோக்ராஜ் சிங்கின் தொடர்ச்சியான சர்ச்சைப் பேச்சுகளுக்காக முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். 

யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங், கடந்த பல ஆண்டுகளாகவே தோனியை கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர தோனியே காரணம் என்று அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். 

அதேபோல், கடந்த ஆண்டு கபில்தேவ் மீதும் அவர் புகார்களை முன்வைத்திருந்தார். 1980-களில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை கபில்தேவ் சீரழித்ததாகவும், ஒருமுறை துப்பாக்கியுடன் அவர் வீட்டிற்கே சென்றதாகவும் யோக்ராஜ் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தந்தையின் இத்தகைய சர்ச்சையான கருத்து குறித்து மவுனம் காத்து வந்த யுவராஜ் சிங், "தந்தையின் இத்தகைய பேச்சுக்கள் சரியானது அல்ல என்று அவரிடமே கூறிவிட்டேன்," என இந்த நேர்காணலில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

கடந்த காலங்களில் நிலவிய கசப்பான சூழலுக்கு மாறாக, 2017-ஆம் ஆண்டு தான் மீண்டும் அணிக்குத் திரும்பியபோது தோனி தன்னிடம் காட்டிய நேர்மையை யுவராஜ் நினைவுகூர்ந்துள்ளார். வருங்காலத் திட்டங்களில் தான் இல்லை என்பதை தோனி தன்னிடம் தெளிவாகக் கூறியதாகவும், அந்தத் தெளிவுதான் 2019-ல் ஓய்வு முடிவை எடுக்கத் தனக்கு உதவியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பாட்டில் அளித்த விளக்கமும், யுவராஜின் நீக்கம் தேர்வுக் குழுவின் கூட்டு முடிவுதான் என்பதை உறுதிப்படுத்தியது.

இந்த நேர்காணலில் பேசியுள்ள யுவராஜ், விராட் கோலி, ரோஹித் சர்மா முதல் தற்போதைய இளம் நட்சத்திரங்களான சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி வரை பலரைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். 

“கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு கோருகிறேன்” - யுவராஜ் சிங் வெளிப்படை
மதுபோதை, நைட் கிளப் சம்பவம்: ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தெலுக்கு கடும் எச்சரிக்கை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in