“ஆட்டத்தை மாற்றாமல் மனநிலையை மாற்றினேன்” - மனம் திறக்​கும் விராட் கோலி

‘இளம் வீரர்​கள் சிறப்​பாக செயல்பட தூண்டுகிறார்கள்’
“ஆட்டத்தை மாற்றாமல் மனநிலையை மாற்றினேன்” - மனம் திறக்​கும் விராட் கோலி
Updated on
2 min read

அகம​தா​பாத்: ஐபிஎல் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை 5 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் வீழ்த்தி தொடர்ச்​சி​யாக 2-வது முறை​யாக சாம்பியன் பட்​டம் வென்று அசத்​தி​யது ஆர்சிபி அணி. 156 ரன்​கள் இலக்கை துரத்​திய ஆர்​சிபி அணி 18 ஓவர்​களில் 5 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றிகண்​டது.

37 வயதான விராட் கோலி 42 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 9 பவுண்டரி​களு​டன் 75 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்கிய பங்கு வகித்​தார். இந்​தத் தொடரில் விராட் கோலி ஒட்​டு மொத்​த​மாக 16 ஆட்​டங்​களில் விளை​யாடி 165.84 ஸ்டிரைக் ரேட்டுடன் 675 ரன்​கள் குவித்து அசத்​தி​னார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக ரன்​கள் குவித்த வீரர்களின் பட்​டியலில் விராட் கோலி 4-வது இடம் பிடித்​தார். அவரது ரன் வேட்​டை​யில் ஒரு சதம், 5 அரை சதங்​கள் அடங்​கும்.

ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி கூறிய​தாவது: வெற்றிக்​கான கடைசி ரன்​களை அடிக்க வேண்​டும் என்​பது கனவில் மட்​டுமே சாத்​தி​ய​மாகக்கூடிய ஒன்​று. இந்​தத் தருணத்தைப் பற்றி நான் பலமுறை யோசித்​திருக்​கிறேன், வெற்றிக்​கான அந்த கடைசி ரன்னை நாம் அடிக்க வேண்​டும் என்று ஆசைப்பட்​டிருக்​கிறேன். ஐபிஎல் தொடரில் இளம் வீரர்​கள் உங்​களை இன்​னும் சிறப்​பாக செயல் பட தூண்​டும் அளவிற்கு கடுமை​யான போட்டி நில​வு​கிறது. நான் என் ஆட்​டத்தை மாற்றாமல், மனநிலை​யைத்​தான் மாற்ற வேண்​டி​யிருந்​தது. பந்​து​வீச்​சாளர்​களைத் துணிச்​சலாக எதிர்​கொண்டு கூடு​தல் ரன்களைக் குவிக்க வேண்​டி​யிருந்​தது.

எங்​கள் அணி இனிமேல் தனிப்​பட்ட வீரரை மட்​டும் நம்பி இருக்க வேண்​டியது இல்​லை. நாங்​கள் இதற்​காக மிக நீண்ட காலம் காத்​திருக்க வேண்​டி​யிருந்​தது. இப்​போது மைதானத்​தில் களம் இறங்கும்​போது, ஒவ்​வொரு முறை​யும் நாமே முன்​னின்று அணியைக் காப்​பாற்ற வேண்​டிய​தில்லை என்ற நிம்​ம​தி​யைத் தரும் சிறந்த வீரர்​கள் குழு எங்​களிடம் இருக்​கிறது. எனக்கு பின்னாலும், என்னை சுற்​றி​லும் போட்​டிகளை வென்று கொடுக்கக்​கூடிய வீரர்​கள் இருக்​கிறார்​கள்.

இந்த சீசனில் எங்​களது அணி​யில் பலருக்கு ஆட்​ட​நாயகன் விருது கிடைத்​துள்​ளது. ஜோஷ் ஹேசில்​வுட், புவனேஷ்வர் குமார், ஜேக்​கப் டஃபி, கிருணல் பாண்​டியா ஆகியோரின் பந்து வீச்சு உலகத்​தரம் வாய்ந்​தது. இவர்​களை நீங்​கள் முழு​மை​யாக நம்​பலாம். இவர்களுடன் இணைந்து இந்த சீசனில் ரஷிக் சலாம் மிகச் சிறப்பாகச் செயல்​பட்​டார். மைதானத்​திற்​குள் வரும்​போது நான் மிக​வும் நிதான​மாக உணர்ந்​தேன். எங்​களிடம் உள்ள அணி, எத்தகைய சூழ்​நிலை​யை​யும் கையாண்டு வெற்​றியை நோக்கி நகர்​வதற்​கான நம்​பிக்​கை​யைத் தரு​கிறது.

இலக்​கைத் துரத்​தும்​போது என்ன செய்ய வேண்​டும் என்​பது எங்களுக்​குத் தெளி​வாகத் தெரிந்​திருந்​தது. லீக் சுற்​றில் புள்​ளிப்​பட்​டியலில் முதலிடத்​தைப் பிடிப்​பதே எங்​களது முதல் இலக்​காக இருந்​தது. அதற்​குப் பிறகு எங்​களுக்கு முன்​னால் எந்த அணி இருக்கிறது என்​ப​தைப் பற்றி நாங்​கள் கவலைப்​பட​வில்​லை. நாங்கள் எதிரணி​களுக்கு மதிப்​பளிக்​கிறோம், யாரை​யும் வம்புக்கு இழுப்​பது இல்​லை. எங்​களிடம் முதிர்ச்​சியடைந்த தொழில்​முறை வீரர்கள் உள்​ளனர். அவர்​களின் அனுபவம் ஆட்டத்தில் தெளி​வாகத் தெரி​கிறது. முக்​கிய​மான சூழ்​நிலை​யில் அனுபவம் வாய்ந்த வீரர்​கள் முன்​னின்று பொறுப்​பேற்க வேண்டும்.

இறு​திப் போட்​டி​யில் சேஸிங் என்​ப​தால் என்னை விரை​வாக ஆட்​ட​மிழக்க செய்ய பார்ப்பார்​கள் என்று எனக்​குத் தெரி​யும், ஆனால் 3-4 ஓவர்​கள் மீதமிருக்​கும்​போதே இந்த இலக்கை அடையக்​கூடிய சாம்​பியன் அணி எங்​களிடம் இருக்​கிறது. கடந்த ஆண்டு நாங்​கள் வெற்றி பெற்​ற​போது, ‘இது முடிவு அல்ல, நாம் அடுத்​தடுத்து சாம்​பியன் பட்​டம் வெல்ல வேண்​டும்’ என எங்​களது அணியின் இயக்​குநர் மோ போபாட் கூறி​னார். ரன் சேஸிங்​கின் தொடக்​கத்​தில், பவர்​பிளே ஓவர்​களி​லேயே ஆட்​டத்தை வசப்​படுத்த வேண்​டும் என்று வெங்​கடேஷ் ஐயரிடம் கூறினேன்.

அந்த வகை​யில், எங்​களிடம் முழு​மை​யான தெளிவு இருந்​தது. பேட்​ஸ்​மேன்​கள் அனை​வரும் தங்​களால் இயன்ற பங்​களிப்பை வழங்​கினர். சரி​யான சமநிலை மற்​றும் அனைத்து துறை​களி​லும் வலு​வாக விளங்​கும் அணி​யில் விளை​யாடு​வதை மிக​வும் மகிழ்ச்சி​யாகக் கருதுகிறேன். அதனால்​தான் இப்​போது மைதானத்​தில் எங்​களால் இவ்​வளவு நம்​பிக்​கையோடு செயல்பட முடிகிறது.

கடந்த ஆண்​டைப் போல இந்த முறை அவ்​வளவு அழுத்​தம் இருப்பதாகத் தெரிய​வில்லை என்​றும், நமது வீரர்​களின் திறமை என்ன என்​பது நமக்கு நன்​றாகவே தெரி​யும் என்​றும் நான் சில வீரர்களிடம் கூறினேன். மேலும் இயல்​பான ஆட்​டத்தை விளையாடி, நமது திட்​டங்​களைச் சரி​யாகச் செயல்​படுத்​தி​னால் இந்​தத் தொடரிலேயே நாம்​தான் சிறந்த அணி என்று எங்களுக்குள் பேசினோம். இது​வரை நாங்​கள் சிறப்​பாகச் செயல் பட்​டதற்கு அதுவே காரணம். எங்​களிடம் உள்ள திறமை, மு​திர்ச்சி மற்​றும் வீரர்​களின் நிதானம் ஆகியவை இறு​திப்​ போட்​டி​யில்​ மீண்​டும்​ தெளி​வாகத்​ தெரிந்​தது. இவ்​வாறு வி​ராட்​ கோலி கூறினார்.

“ஆட்டத்தை மாற்றாமல் மனநிலையை மாற்றினேன்” - மனம் திறக்​கும் விராட் கோலி
FIFA WC 2026: இந்தியாவில் போட்டிகளை ஒளிபரப்பும் ஜீ நிறுவனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in