

அகமதாபாத்: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. 254 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி கடும் அச்சுறுத்தல் கொடுத்தது.
இந்த ஆட்டத்தில் அக்சர் படேல் 2 அபாரமான கேட்ச்களை எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அடித்த பந்தை கவர் திசையில் நின்ற அக்சர் படேல் பின்புறமாக 24 மீட்டர் தூரம் விரைவாக ஓடிச் சென்று பாய்ந்தபடி அற்புதமாக கேட்ச் செய்தார்
இதேபோன்று 14-வது ஓவரில் வில் ஜேக்ஸ் அடித்த பந்தை எல்லைக்கோட்டுக்கு அருகே அக்சர் படேல் எல்லைக்கோட்டுக்கு அருகே பந்தை பாய்ந்து பிடித்தார். ஆனால் நிலை தடுமாறிய அவர், பந்தை உள்ளே தூக்கி வீசியபடி எல்லைக்கோட்டுக்கு வெளியே விழுந்தார். அப்போது ஷிவம் துபே அதை கேட்ச் செய்ய வில் ஜேக்ஸ் ஆட்டமிழந்தார்.
போட்டி முடிவடைந்த பின்னர் இந்த 2 கேட்ச்கள் தொடர்பாக அக்சர் படேல் கூறும்போது, “ஹாரி புரூக் கேட்ச் சிறப்பானது. அது கடினமாக இருந்தது. ஆனால் ஆட்டத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டால் அப்போது பார்ட்னர்ஷிப்பை உடைப்பதற்கு மிகவும் முக்கியமானதாக வில் ஜேக்ஸ் கேட்ச் அமைந்தது.
பீல்டிங் அடிப்படையில் என்னைக் கேட்டால், ஹாரி புரூக்கின் கேட்ச் கடினமாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக பந்து என்னைத் துரத்துகிறது என்று நினைத்தேன். எந்த நேரத்திலும், போட்டி எங்களது பிடியில் இருந்து விலகிச் செல்லும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
ஏனெனில் அர்ஷ்தீப்புக்கும், பும்ராவுக்கும் 2 ஓவர்கள் மீதம் இருந்தன. அவர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். இதனால் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியும் என்று நாங்கள் நினைத்தோம், அதுதான் நடந்தது" என்றார்.
இறுதிப் போட்டி நடுவர்கள் அறிவிப்பு:
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது.இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அலெக்ஸ் வார்ஃப் ஆகியோர் களநடுவர்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.