கேகேஆர் வழியில் ஆர்சிபி: குஜராத் டைட்டன்ஸ் திட்டம் நொறுங்கிய கதை!

கேகேஆர் வழியில் ஆர்சிபி: குஜராத் டைட்டன்ஸ் திட்டம் நொறுங்கிய கதை!
Updated on
2 min read

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சு பலம் கருதி அணிகள் எச்சரிக்கையுடன் ஆட, நேற்று பட்டிதார் அண்ட் கம்பெனியான ஆர்சிபி அணி, சிராஜ், ரபாடா, பிரசித் கிருஷ்ணா, ஹோல்டர், ரஷீத் கான் அடங்கிய டாப் பவுலிங் யூனிட்டை அடித்து ஆடி துவம்சம் செய்தது.

மே 16-ம் தேதி அன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கையாண்ட காட்டடி தர்பார் முறையையே ஆர்சிபி அணியும் நேற்று தரம்சாலாவில் கைகொள்ளும் அல்லது கைகொள்ள முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அன்று ஃபின் ஆலன் (93), ரகுவன்ஷி (82), கேமரூன் கிரீன் (52) என்று விளாசித்தள்ள 247 ரன்களை வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்தது கொல்கத்தா. சிராஜ் 50 ரன்கள், ரபாடா 40 ரன்கள். ரஷீத் கானின் 4 ஓவரில் 57 ரன்கள். சாய் கிஷோர் 3 ஓவர் 38 ரன்கள் என்று மைதானம் நெடுக இவர்களது பந்துகள் பறந்த வண்ணம் இருந்தன.

சேஸிங்கில் ஷுப்மன் கில் 85, சாய் சுதர்ஷன் 53, ஜாஸ் பட்லர் 57 என்று வீரம் காட்டினாலும் 16.2 ஓவர்களில் 177 ரன்களைத்தான் எட்ட முடிந்தது. மீதமுள்ள 3.4 ஓவர்களில் 70 ரன்கள் என்பது எட்டாக்கனியாக 218 ரன்களையே எடுத்து முடிந்தது குஜராத்.

அதே போல் நேற்றும் அன்று செய்த அதே தவற்றை குஜராத் கேப்டன் கில் செய்தார், டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் என்று ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்ற சூழ்நிலையில் அடுத்த 8 ஓவர்களில் ஸ்கோர் 189 ரன்களை எட்டும் என்று சற்றும் எதிர்பாராத அதிரடியைக் கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் நின்றது குஜராத்.

ரஜத் பட்டிதார், பவர் ப்ளேயில் செய்ய வேண்டியதை மிடில் ஓவர்களில் செய்தார். பவர் ப்ளேயில் 76 ரன்களைக் குவித்த பிறகே தரம்சாலா பிட்சின் தன்மைகள் சற்றேனும் கடினமானது என்றே கூற வேண்டும். 7-வது ஓவரில் இருந்து 13-வது ஓவரை வரை 2 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்களையே சேர்க்க முடிந்தது. பட்டிதார் அப்பொது கொஞ்சம் திணறியபடிதான் இருந்தார். 2 கேட்ச் வாய்ப்புகள் நழுவவிடப்பட்டன. அதிலும் ரபாடா விட்டது எளிதான கேட்ச். 15-வது ஓவரின் போது பட்டிதார் 14 பந்துகளில் 22 ரன்களையே எடுத்திருந்தார். ஷாட்களும் வரவில்லை.

ஆனால், குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சு லெந்த், கோணம், திசை என்று சறுக்க 14 பந்து 22-லிருந்து 22 பந்து 61 என்று 6 சிக்ஸர்கள் மூலம் பட்டிதார் திடீரென எழுச்சி கண்டார். கடைசியில் 9 சிக்ஸர்களுடன் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். அதாவது 14 பந்தில் 22-க்கு பிறகே 19 பந்துகளில் 71 ரன்களை விளாசினார் என்றால் குஜராத் டைட்டன்ஸ் எங்கு வீழ்ச்சி கண்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கோலியின் இன்னின்ங்ஸினால் பவர் ப்ளேயில் நல்ல தொடக்கம் கண்டு பிறகு பவர் ப்ளேயின் எச்சரிக்கையை மிடில் ஓவர்களில் கையாண்டு நிலை நிறுத்தியப் பிறகு கடைசி 5 ஓவர்களில் பின்னிப் பிரித்தெடுத்த ஆர்சிபி அணி நிச்சயம் வெற்றி பெறத் தகுதியான அணிதான்.

சேஸிங்கில் பவர் ப்ளேயிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் என்று தோல்வியை நோக்கிச் சரிவு கண்டது குஜராத் டைட்டன்ஸ்.

கேகேஆர் வழியில் ஆர்சிபி: குஜராத் டைட்டன்ஸ் திட்டம் நொறுங்கிய கதை!
இருமுறை ஹிட் விக்கெட்: விரும்பத்தகாத சாதனையில் சாய் சுதர்ஷன்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in