

கவ்லூன்: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடர் அந்நாட்டில் உள்ள கவ்லூன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ், டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள வீராங்கனையுமான சீனாவின் சென் யு ஃபெய்-ஐ எதிர்த்து விளையாடினார்.
இதில் ரக்ஷிதா ராம்ராஜ் 21-18, 24-22 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 19 வயதான ரக்ஷிதா ராம்ராஜ் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
ரக்ஷிதா கூறும்போது, “எனது பேட்மிண்டன் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்று. சென் யு ஃபெய் எனது ரோல்மாடல். அவருக்கு எதிராக நான் வெற்றி பெற்றதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. எனது பாட்மிண்டன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இது இருக்கும்.
அவருக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் மேற்கொண்ட அனைத்து உத்திகளும் நல்ல பலனை அளித்தன. எந்தக் கட்டத்திலும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. எனது தாக்குதல் ஆட்டம் சிறப்பாக இருந்தது சாதகமாக அமைந்தது” என்றார்.
கால் இறுதி சுற்றில் ரக்ஷிதா, தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவோங்குடன் மோதுகிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-11, 21-18 என்ற நேர் செட் கணக்கில் டென் மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-16 என்ற செட் கணக்கில் மலேசியாவின் நூர் முகமது அஸ்ரின் அயூப், டான் வீ கியாங் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 20-22, 13-21 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் லாரன் லாம், அலிசன் லீ ஜோடியிடம் தோல்வி அடைந்தது.