

சென்னை: ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் ஹாக்கி இந்தியா லீக் போட்டிகள் சென்னையில் இன்று முதல் நடைபெறவுள்ளன.
ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் ஹாக்கி இந்தியா லீக் போட்டி 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 சீசன்கள் நடைபெற்றது. அதன் பின்னர் இப்போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப்
பிறகு ஹாக்கி இந்தியா லீக் போட்டி கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. ரூர்கேலா, ராஞ்சி நகரங்களில் இப்போட்டி நடைபெற்றது. இதில் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த ஆண்டு 7-வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி சென்னை, ராஞ்சி, புவனேஸ்வர் ஆகிய 3 நகரங்களில் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டி சென்னையில் ஜனவரி 3-ம் தேதி (இன்று) தொடங்கி வரும் 9-ம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2-வது கட்ட போட்டிகள் ராஞ்சியில் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையும், 3-வது மற்றும் கடைசி கட்ட லீக் போட்டி,
பிளே ஆப், இறுதி ஆட்டம் ஆகியவை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையும் நடைபெறுகின்றன.
சென்னையில் நடைபெறும் முதல் சுற்றுப் போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ், நடப்பு சாம்பியன் பெங்கால் டைகர்ஸ், கலிங்கா லான்சர்ஸ், ராஞ்சி ராயல்ஸ், ஹைதராபாத் தூபான்ஸ், எஸ்ஜி பைப்பர்ஸ், சூர்மா ஹாக்கி கிளப், எச்ஐஎல் ஜிசி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
வரும் 23-ம் தேதி பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் தொடங்குகின்றன. 23-ம் தேதி நடைபெறும் குவாலிபையர்-1 ஆட்டத்தில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும்.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குச் செல்லும். அதைத் தொடர்ந்து நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3, 4-வது இடங்களைப் பிடித்த அணிகள் மோதும்.
இதில் வெற்றி பெறும் அணி, குவாலிபையர்-1 ஆட்டத்தில் தோல்வி கண்ட அணியுடன் 25-ம் தேதி நடக்கும் குவாலிபையர்-2 ஆட்டத்தில் விளையாடும்.
குவாலிபையர்-2 ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 3-வது இடத்துக்காக நடைபெறும் போட்டியில் குவாலிபையர்-2 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களில் தோல்வி கண்ட அணிகள் மோதும். இந்த ஆட்டம் 26-ம் தேதி நடைபெறும்.
டிராகன்ஸ்: சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ், ஹைதராபாத் தூபான்ஸ் அணிகள் மோதும். சென்னை அணிக்கு அமித் ரோஹித்தாஸ் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அணி புத்துணர்வுடன் களமிறங்குகிறது.
ஹாக்கி இந்தியா லீக் போட்டிகள் சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.